இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயர்ந்ததோடு, அனைத்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடி காரணமாக அங்கு, ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் இலங்கையின் தென் பகுதிகளில் மட்டுமே பெரிய அளவில் நடந்துவருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணங்களில் இதுபோன்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற செய்திகளே அங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
சிங்களர்களோடு கைகோர்த்த தமிழர்கள்!
கடும் பொருளாதார நெருக்கடியால், சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே ராஜபக்சே அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிங்களப் பகுதிகளில் வாழும் சில தமிழ் மக்கள் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதுவரை தனித் தனியே இருந்துவந்த தமிழர்களும், சிங்களர்களும் அரசுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட நகரங்களிலும் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அங்கும் மக்கள் பலரும் எரிவாயு, மருந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் திண்டாடிவருகிறார்கள். நாட்டின் மற்ற பகுதிகளில் என்ன நிலையோ, அதேதான் வடமாகாணத்தின் நிலையும். இருந்தும், அங்கு அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. அங்கு, சிறு சிறு அரசியல் அமைப்புகள் மட்டுமே மிகச் சிறிய அளவிலான போராட்டங்களை நடத்திவருகின்றன. வட மாகாணங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படாததற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஓரளவுக்குக் காப்பாற்றும் விவசாயம்!
இலங்கையின் வடமாகாணத்தின் முக்கியத் தொழில்களுள் ஒன்றாக இருக்கிறது விவசாயம். இதன் காரணமாக தங்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி, பழங்களை தங்களது விவசாயம் மூலம் பெற்றுவருகிறார்கள் வடமாகாண தமிழ் மக்கள். மேலும், இந்தப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்களில், ஒருவராவது வெளிநாட்டில் வேலை செய்பவராக இருப்பார்கள். எனவே, அவர்கள் அனுப்பும் பணத்தை வைத்து, ஓரளவுக்கு தங்களது தேவைகளைத் தமிழ் மக்கள் பூர்த்தி செய்துகொள்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவ்வாறு தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது தமிழ் மக்கள் சிலர்தான், அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
போர் தந்த அனுபவம்?
தமிழ் பகுதியில் பெரும் போராட்டங்கள் நடக்காதது குறித்து, விகடனுக்கு அளித்த பேட்டியில் ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் நிலாந்தன். “போர் சமயத்தில் தமிழ் மக்கள் சந்தித்த பிரச்னைகளை ஒப்பிடும்போது, இந்த நிலையெல்லாம் ஒன்றுமே இல்லை. அப்போது இதைக்காட்டிலும் அதிக இன்னல்களைத் தமிழ் மக்கள் சந்தித்ததால், இந்தப் பொருளாதார நெருக்கடி நிலையையும் கடப்பார்கள்” என்று கூறியிருந்தார் நிலாந்தன்.
ராணுவக் கட்டுப்பாடு?
இலங்கையின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில்தான் அதிக அளவில் ராணுவத்தினர் பணியிலிருப்பதாகச் சொல்லப்படுகிறது. போருக்குப் பிறகு தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பி.பி.சி ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அகிலன் கதிர்காமர், “தமிழ் பகுதிகளிலும் கடும் பொருளாதார நெருக்கடிச் சூழலே நிலவுகிறது. ஆனால், நடந்து முடிந்த போர் காரணமாகவும், போருக்கு பிறகான ராணுவக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் இங்குள்ள மக்கள் போராட்டங்களில் இறங்குவது குறைவாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் மத்தியில் ஓர் அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தென் மாகாண மக்களுடன் இணைந்து போராட்டம் செய்தால், தங்களின் தனித்துவமான கோரிக்கைகளும், அரசியலும் பலவீனமடையும் என்ற எண்ணமும் இங்கிருக்கும் அரசியல் அமைப்புகளிடம் இருக்கிறது” என்றிருந்தார்.

அரசியல் தலைமை இல்லை?
இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களை வழிநடத்தச் சரியான அரசியல் தலைமை இல்லை என்றே கருதுகிறார்கள். அங்கிருக்கும் அரசியல் அமைப்புகளிடமும் தெளிவான திட்டங்கள் இல்லை என்பதால், அவர்களை நம்பி போராட்டத்தில் இறங்கத் தமிழ் மக்கள் தயாராக இல்லையெனத் தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள், போராட்டங்களில் இறங்காமல், கிடைப்பதை வைத்து நெருக்கடிகளைச் சமாளித்துவருகிறார்கள். அதே வேளையில், இந்த நெருக்கடியை நீண்ட நாள்களுக்கு அவர்களால் சமாளிக்க முடியாது என்பதும் கசப்பான உண்மையான இருக்கிறது.