புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 14-ந் தேதி பாதிப்பு 1,007 ஆகவும், 15-ந் தேதி 949, 16-ந் தேதி 975 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அங்கு கடந்த 11-ந் தேதி பாதிப்பு 137 ஆக இருந்தது.
பின்னர் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்த நிலையில் நேற்று 461 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது ஒரு நாள் பாதிப்பில் கடந்த 48 நாட்களில் இல்லாத அளவில் அதிகம் ஆகும். அங்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி பாதிப்பு 484 ஆக இருந்தது. அதன் பிறகு பாதிப்பு தொடர்ந்து குறைந்த நிலையில் நேற்று பாதிப்பு மீண்டும் 400-ஐ கடந்துள்ளது.
டெல்லியில் தினசரி பாதிப்பு விகிதமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 8,646 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதிப்பு விகிதம் 5.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுதவிர அரியானாவில் 202, உத்தரபிரதேசத்தில் 102, மகாராஷ்டிரத்தில் 98, மிசோரத்தில் 96 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 42 ஆயிரத்து 97 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் டெல்லியில் 2 பேர், ஜம்முகாஷ்மீர், மிசோரத்தில் தலா ஒருவர் என நேற்று 4 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிககை 5,21,751 அக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 954 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக உயர்ந்தது. தற்போது 11,558 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 192 அதிகம் ஆகும்.