"கறி சோறு, வடை பாயாசம் கச்சேரில மட்டும்தான் கிடைக்கும்" – நினைவுகள் பகிரும் அந்தோணிதாசன்

நாட்டுப்புற பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகமாக ஜொலிப்பவர் அந்தோணிதாசன். `ஃபோக் மார்லே’வாக தனிப்பாடல்களில் ஈர்க்கிறார். சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’யிலும் கலக்கியிருந்தார். வெற்றி பெற்ற ஒவ்வொரு கலைஞனுக்குப் பின்னாலும், சோகங்கள், அவமானங்கள் இருக்கும் என்பதை அந்தக் கலைஞர்கள் வாழ்க்கையில் பார்க்கமுடியும். இதற்கு உதாரணமாக அந்தோணிதாசனின் வாழ்க்கையையும் சொல்லலாம். அதை அவரே பகிர்கிறார்.

“அப்பா பிறந்த ஊரைத்தான் பூர்வீகமா சொல்றது வழக்கம். அந்த வகையில என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் பக்கம் இருக்கற இளையான்குடி பக்கத்துல வடக்கு கீரனூர். அம்மா பிறந்தது மானாமதுரை பக்கம் கேப்பனூர். இரண்டு பேரும் பஞ்சம் பிழைக்க தஞ்சை மண்ணுக்கு வந்தாங்க. ரெண்டு பேரும் தூரத்து சொந்தம், ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமாகியிருக்காங்க. எங்க அம்மாவோடு கூடப்பிறந்தவங்க மதுரைனால நான் கோரிப்பாளையத்துலதான் பிறந்தேன்.

ஃபோக் மார்லேவாக..

வீட்ல எங்க அப்பா, அம்மாவுக்கு அடிக்கடி சண்டை நடக்கும். இதனால எங்க அக்காவும் நானும்தான் பாதிக்கப்படுவோம். அப்பா – அம்மா சண்டையில அப்பா என்னையையும், அம்மா எங்க அக்காவையும் தனித்தனியா கூட்டிட்டு போயிடுவாங்க. ஏன்னா, ஆம்பளப்புள்ளைனா அப்பாவோடு சேர்ந்திருக்கணும். பொம்பளபுள்ளைனா அம்மாவோடு சேர்ந்திருக்கணும்னு சொல்வாங்க. அதான் எங்க வீட்லயும் நடக்கும். இப்படி இருந்ததுல ராமநாதபுரம், மதுரை இரண்டோட வாழ்வியல்களையும் வாழ்ந்திருக்கேன். அப்புறம் நான் வளர்ந்தது, ஆறாவது வரை படிச்சதெல்லாம் ரெட்டிப்பாளையம். இன்னமும் அங்கே என் சொந்தபந்தங்களை இருக்க வச்சுட்டு, நான் உலகப்புகழை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கேன்.

வறுமையைக் கண்டவன் அவனோட பெருமையையும் கண்டுக்காமல் விடமாட்டான். அப்பா நாதஸ்வர கலைஞர், அம்மா விவசாயக் கூலி. என்னோட சின்ன வயசுல இருந்தே நான் துறுதுறுனு இருப்பேன். சினிமாப்படம் எதாவது பார்த்தாக்கூட, அந்தப் படத்தோட பாடல்களுக்கு ஆடிட்டு பாடிட்டு இருப்பேன். கிறிஸ்துமஸ் காலங்கள்ல அந்த சினிமாப்பாடல்களின் வரியை மாத்தி ஏசப்பா பாட்டு பாடிட்டு இருப்பேன். வீட்டுக் கஷ்டத்திலும் பங்கெடுத்துக்குவேன். அம்மா, அப்பா வீட்டு வேலைக்கு போனதும் வீட்டை பாத்துக்குவேன். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து மீன் பிடிச்சுட்டு வருவேன். பள்ளிக்கூடத்தை கட் அடிச்சிட்டு வீட்டுக்கு வந்திடுவேன். கூடவே பள்ளிக்கூட நண்பர்களும் வந்திடுவாங்க. வீட்டுல இருக்கும் உண்டியலை உடைச்சி அதுல உள்ள காசை எடுத்து என் நண்பர்களுக்கு பொங்கல், கேசரி எல்லாம் செய்து கொடுப்பேன். சித்தாளு வேலைக்குப் போயிட்டு ராத்திரி ஏழு மணிக்கு வீட்டுக்கு வரும் அம்மாவுக்கு சுடசுட சோறு ஆக்கி வச்சி, அவங்கள சாப்பிட வச்சு அழகு பார்ப்பேன். இதெல்லாம் செஞ்சப்ப எனக்கு ஏழு வயசுதான் இருக்கும்.

அந்தோணிதாசன்

எங்க அக்கா திருச்சியில படிச்சிட்டு இருந்தாங்க. எங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி வரும். எங்க அம்மாவுக்கு பிக்ஸ் வரும். இப்படி வீட்டுல யாராவது ஒருத்தர் அவதிப்பட்டுட்டு இருப்பாங்க. நான் ஆறாவது பாஸ் ஆகி, ஏழாவது போனேன். ஒரு வாரம்கூட போயிருக்க மாட்டேன். குடும்ப சூழல்னால படிப்பை விடவேண்டியதாகிடுச்சு. எங்க அப்பா நாதஸ்வர கச்சேரிகளுக்கு போறப்ப, சுருதிபெட்டியை சுமந்துகிட்டு கச்சேரிகளுக்குப் போன நினைவுகளும் இருக்கு. போற இடங்கள்ல நல்ல சோறு கிடைக்கும். கறி சோறு, வடைபாயசத்தோடு சோறுன்னு அப்படிச் சாப்பிட்டாத்தான் உண்டு. விழாக்களுக்குப் போனால் அதில் வருமானமும் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆடுறவங்களுக்கு சட்டையில ரூபாய் நோட்டை குத்திவிடுறது பார்த்து பிரமிச்சேன். இப்படியெல்லாம் சிரமப்பட்டிருக்கேன். நான் என்னிக்கு கலைத்தாயை என் உடம்பில் சுமந்தேனோ… அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரை அவங்க என்னை வாழவச்சிட்டுதான் இருக்காங்க!”

அந்தோணிதாசனின் முழு பேட்டியை வீடியோ வடிவில் இங்கே காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.