உயரம் குறைந்த வாலிபரை எம்.எல்.ஏ.வாக்க முடிவு: ம.பி.யில் நெகிழ்ச்சி!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர்
அங்கேஷ் கோஷ்தி
(28). இவரது உயரம் 3.7 அடி. இதனால், சிறு வயதில் இருந்தே பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளார். எம்.பி.ஏ., பட்டதாரியான அவரது உயரம் காரணமாக அவருக்கு வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில், குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
பிரவீன் பதக்
மூலம் தற்போது அங்கேஷ் கோஷ்திக்கு வேலை கிடைத்துள்ளது.

அங்கேஷ் கோஷ்தி குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரவீன் பதக் பதிவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு பல நிறுவனங்களில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து பிரவீன் பதக் கூறுகையில், “அங்கேஷ் கோஷ்தி அவரது தாயாரின் ஆதார் அட்டைக்காக என்னிடம் வந்தார். அப்போதுதான் அவருடைய பிரச்சனைகளை நான் அறிந்தேன். எம்.பி.ஏ., தேர்ச்சி பெற்றும்கூட உயரம் குறைவாக உள்ள காரணத்தால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.” என தெரிவித்துள்ளார்.

ஏதாவது வேலை வேண்டும் என்று அங்கேஷ் கோஷ்தி தன்னிடம் கேட்டதாக தெரிவித்த எம்.எல்.ஏ., பிரவீன் பதக், “சமூக ஊடகங்களில் அவருக்காக ஒரு வீடியோவை வெளியிட்டேன். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் சென்றுள்ளன. இறுதியாக, ஒரு நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. எனக்குப் பதிலாக அங்கேஷை ஒருநாள் எம்எல்ஏவாக அறிவிக்கவும் முடிவு செய்துள்ளேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அங்கேஷ் கோஷ்தி கூறுகையில், “நான் எம்.பி.ஏ., தேர்ச்சி பெற்றுள்ளேன், எனது உயரம் குறைவாக இருப்பதால் (3 அடி, 7 அங்குலம்) வேலை கிடைக்கவில்லை. இது தொடர்பாக எம்.எல்.ஏ., பிரவீன் பதக் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இரண்டு மணி நேரத்தில் 35-40 நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்து, அவற்றில் ஒன்றில் வேலை கிடைத்தது.” என்று தெரிவித்துள்ளார்.

அங்கேஷ் கோஷ்திக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததையடுத்து அவரது தாயாரும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எம்.எல்.ஏ., பிரவீன் பதக்கிற்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். அங்கேஷின் தாயார் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார், தந்தை தையல்காரராக இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.