இரண்டு நாள் பயணமாக வருகிற 21-ந் தேதி இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியை 22-ந் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பிறகு போரிஸ் ஜான்சன் இதற்கு முன் இருமுறை இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா காரணமாக இருமுறையும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவிலும் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அந்த திட்டம் ரத்தானது.
இந்த நிலையில், வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
21-ந் தேதி குஜராஜ் மாநிலம் அகமதாபாத்திற்கு வரும் போரிஸ் ஜான்சன், முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
அப்போது, இந்தியாவிலுள்ள முக்கிய தொழில்களில் பெரிய அளவில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பையும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா – இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை 2035 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 37 பில்லியன் டாலராக அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து 22-ந் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆசிய பசிபிக் நாடுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை இருதரப்பிலும் வலுப்படுத்துவது குறித்தும் போரிஸ் ஜான்சனும், நரேந்திர மோடியும் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், உக்ரைன் போர் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில், இந்தியா நடுநிலை நிலைப்பாட்டுடன் இருக்கும் நிலையில், இங்கிலாந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.