குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா சென்னை?

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி (லக்னோ, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (ஐதராபாத் அணியிடம்) 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (5 ஆட்டங்களில் 228 ரன்கள்), சுப்மான் கில் (200 ரன்கள்), டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார்கள். வேகப்பந்து வீச்சில் லோக்கி பெர்குசன் (8 விக்கெட்), முகமது ஷமி (7 விக்கெட்) ஆகியோர் அசத்துகின்றனர். சுழற்பந்து வீச்சில் ரஷித் கான் ரன் விட்டுக்கொடுப்பதில் சிக்கனம் காட்டுவதுடன் விக்கெட்டும் வீழ்த்துகிறார்.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 ஆட்டங்களில் (கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம்) தொடர்ச்சியாக தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.‘பிளே-ஆப் ’சுற்று வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். சென்னை அணியில் ஷிவம் துபே (207 ரன்கள்), ராபின் உத்தப்பா (194 ரன்கள்) தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று ஆடாதது அந்த அணிக்கு பிரச்சினையாக உள்ளது. அத்துடன் சென்னை அணியின் பந்து வீச்சும் ஏற்றம் காண வேண்டும். குஜராத் அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் சென்னை அணி பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் ஒருசேர சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.