தமிழகத்தில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன: மா.சுப்பிரமணியன் தகவல்

உதகை: தமிழகத்தில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி உதகை மருத்துவக்கல்லூரியில் இன்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”உதகையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது மக்களுக்கு வர பிரசாதமாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு, முதல்வர் முன்னிலையில் பிரதமரால் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 1,650 மருத்துவ இடங்களில் 1,450 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இடங்களில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலந்தாய்வு முடித்து சேர்க்கப்பட்டனர். மாநில அரசு நிரப்பப்பட வேண்டிய இடங்களில் முறையாக நிரப்பப்பட்டு விட்டன. மத்திய அரசு இடங்களில், 24 இடங்கள் நிரப்ப வேண்டும். இந்த இடங்களை நிரப்ப மத்திய அரசு கால அவகாசம் கோரியுள்ளது. உதகை மருத்துவக் கல்லூரியில் உள்ள 150 இடங்களில் 149 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மலை மாவட்டத்தில் வந்துள்ள முதல் மருத்துவ கல்லூரி நீலகிரியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு மருத்துவ கல்லூரி வந்துள்ளது என்பது நீலகிரி மக்களுக்கு கிடைந்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு.

தமிழகத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசி 99 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 77 சதவீதம் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி 88 சதவீதமாக இருந்து வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் இருந்தது. மே மாதத்துக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்தது. தடுப்பூசி போடும் பணி கால தாமதமானதால், நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே அதிகரித்துள்ளது.” இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கல்லூரி டீன் மனோகரி, மருத்துவக்கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.