திருமணமான புதிதில் பலமுறை; அதன் பிறகோ..! என்னவாகிறது தம்பதியருக்கு? காமத்துக்கு மரியாதை – S2 E16

”கல்யாணமான புதுசுல தினமும் அஞ்சாறு தடவைகூட செக்ஸ் வெச்சிருக்கேன். ஆனா, இப்ப எல்லாம் அந்தளவுக்கு இயங்க முடியலை. எனக்கு ஏதாவது பிரச்னை இருக்குமாடா மச்சான்” என்று ஆண்கள் பேசுவதைக் கேட்டிருப்போம். பெண்களும் இது தொடர்பான தங்களுடைய ஏக்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதைப் பார்த்திருப்போம். திருமணமான புதிதில் பலமுறை உறவில் ஈடுபடும் ஆண்கள், வருடங்கள் செல்லச்செல்ல வாரத்துக்கு ஒரு முறை, அல்லது மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என்று தாம்பத்திய எண்ணிக்கையை அவர்களை அறியாமல் குறைத்து விடுவார்கள். இதற்கு காரணம் மனமா, உடலா என்று பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்போம்.

காமத்துக்கு மரியாதை

“இந்த நிலைக்கு மனம், உடல் இரண்டுமே தான் காரணங்கள். புதிதாக ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணின் அருகில் செல்லும்போது அவர்களால் ஈர்க்கப்பட்ட அந்த ஆண் மற்றும் பெண்ணின் உடம்பில் பினைல்எத்திலமைன் (phenylethylamine) என்கிற ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இதுதான் காதல் ஹார்மோன். இந்த ஹார்மோன் சுரக்கும் அளவு திருமணமான புதிதில் உச்சத்தில் இருக்கும். நாள்கள் செல்லச்செல்ல இந்த ஹார்மோன் சுரக்கும் அளவு குறைய ஆரம்பிக்கும்.

கொரில்லா, சிம்பன்சி ஆகிய விலங்குகளிடம் இந்த ஹார்மோன் தொடர்பான ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். புது துணையை கொரில்லாக்களுடன் கொண்டு வந்து சேர்க்கும்போது இரண்டின் உடல்களிலும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகம் இருப்பதையும், ஏற்கெனவே பழகிய கொரில்லாக்களை இணை சேர்க்கும்போது அந்த ஹார்மோன் சுரக்கும் நாள்கள் செல்லச்செல்ல குறைவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மனம் சார்ந்த காரணம் என்றால், புதிதாகத் திருமணமானவர்கள் மத்தியில் எந்தவிதமான நெகடிவ் பாயின்ட்ஸும் இருக்காது. ஏனென்றால் அவர்கள் இனி மேல்தானே ஒருவரையொருவர் அறிந்துகொள்ளப் போகிறார்கள். அதன் பிறகுதானே ஒருவரின் குறை மற்றவருக்குத் தெரியவரும். நெகடிவ் தெரியாதபோது ஈர்ப்பு அதிகமாகத்தான் இருக்கும். நாள்கள் செல்லச்செல்ல, ‘இவருக்கு கோவம் அதிகமா வருது; ஈர டவலை படுக்கை மேல் அப்படியே போட்டுட்டு போயிடுறார்’ என்று கணவன் மீது மனைவிக்கும், ‘நான் சொல்றது எதையுமே கேட்க மாட்டேங்கிறா; ரொம்ப பிடிவாதக்காரி’ என்று மனைவி மீது கணவருக்கும் நெகட்டிவ் எண்ணங்கள் ஏற்படலாம். இந்த எண்ணங்கள் பரஸ்பரம் இருவரின் மனங்களுக்குள்ளும் ஒரு மூட்டை போல சேர ஆரம்பிக்கும்.

பாலியல் மருத்துவர் காமராஜ்

தம்பதியர் மனநிலையைத் தெளிவாகச் சொல்லும் கிரேக்க கதை ஒன்று உண்டு. கிரேக்கத்தில் பூதம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது தினமும் தான் சந்திக்கிற நபர்களுக்குச் சுவையான விருந்து படைப்பது வழக்கம். அவர்கள் சாப்பிட்ட பிறகு அவர்களை தன்னிடம் இருக்கிற கட்டிலில் படுக்க வைக்கும். அந்தக் கட்டிலின் உயரத்திற்கு அவர்கள் சரியாக இருக்க வேண்டும். உயரம் குறைவாக இருந்தால், அவர்களுடைய தலையையும் கால்களையும் பிடித்து இழுத்துக் கொன்றுவிடும். உயரம் அதிகமாக இருந்தால், அவர்களுடைய தலையையும் பாதங்களையும் வெட்டிக் கொன்று விடும்.

இங்கு எல்லா தம்பதிகளிடமும் அந்த பூதத்திடம் இருந்தது போன்ற ஒரு கட்டில் இருக்கிறது. வாழ்க்கைத் துணை அந்தக் கட்டிலுக்குள் அடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், யதார்த்தம் வேறல்லவா? ஒருவருடைய ஃபிரேமுக்கு இன்னொருவர் பொருந்த முடியாதே… அப்படி நடக்காதபட்சத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு மனவருத்தம் வந்துவிடுகிறது. இது காதல் ஹார்மோன் சுரப்பை மெள்ள குறைக்க ஆரம்பிக்கிறது. இதனால்தான், திருமணமான புதிதில் ஒருநாளில் பலமுறை தாம்பத்திய உறவு வைத்துக்கொண்ட தம்பதியர், நாளாக ஆக அவர்களையும் அறியாமல் குறைத்துக்கொள்கிறார்கள். இதற்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன.

காமத்துக்கு மரியாதை

பலருடன் உறவு, ஏற்றுக்கொள்ளவே முடியாத தீய பழக்க வழக்கங்கள் தவிர்த்து உங்கள் வாழ்க்கைத் துணையை அவர்களுடைய நிறை குறைகளுடன் அப்படியே நேசிக்கப் பழகுங்கள். இது முதல் தீர்வு. காதல் ஹார்மோன் எப்போதும் போதுமான அளவுக்குச் சுரக்க வேண்டுமென்றால், நிறைய காதலுடன் இருக்க வேண்டும்.

இதற்கு ஒரே வழி தினமும் உறவில் ஈடுபடுவது. அதற்கு என்ன வழி என்று பார்த்தால், இரவுகளில் ஆடையில்லாமல் உறங்குவதுதான். இது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இதை யாரும் நம்புவதில்லை. இப்படித் தூங்கிப் பாருங்கள். ஈர்ப்பு எப்போதும் இருக்கும். இதுதான் இரண்டாவது தீர்வு” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

(தொடர்ந்து மரியாதை செய்வோம்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.