மாற்று திறனாளிகளுக்கான தொழில்நுட்பத்தை உறுதி செய்ய வேண்டும்- குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஐதராபாத்
ஐதராபாத்தில் உள்ள அறிவுசார் திறன் குறைபாடு கொண்டவர்களை அதிகாரப்படுத்தும் தேசிய நிறுவனத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மாற்றுத்திறனாளி சமூகத்தின் மீதான மக்களின் மனப்போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.  மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பது அரசு மற்றும் சமுதாயத்தின் பொறுப்பு. 
அவர்களின் செயல்திறன் வெளிப்படுவதற்கு உகந்த சூழலை உருவாக்குவது அவசியம்.  மாற்றுத்திறனாளிகளுக்கு நமது அனுதாபம் தேவையில்லை, அவர்கள் முழு ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள  ஒவ்வொரு வாய்ப்பையும் பெற அவர்களுக்கு உரிமை உள்ளது.
சுற்றுச்சூழல், போக்குவரத்து, தகவல் மற்றும் தொடர்பு முறைகளில் அவர்கள் எளிதில் அணுகும் வகையில் சூழலை உருவாக்க வேண்டும். பொது இடங்கள், போக்குவரத்து, தனியார் கட்டிடங்கள் ஆகியவற்றை மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைப்பது அவசியம். 
பள்ளிகளில், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் தேவைகளை அறிந்து, உணர்வு பூர்வமாக செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைப் பணியமர்த்துவது முக்கியமாகும்.  
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்பத்தை உறுதி செய்ய வேண்டும். மாற்று திறனாளிகள் திறன் தொழில்நுட்பத்தை எளிதில் அணுகும் வகையில் இந்தியாவில் உள்ள தேசிய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பணியாற்ற வேண்டியது அவசியம்.  
மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர் அவர்களுக்கு உணர்வு பூர்வமான ஆதரவை வழங்கி வருவதை பாராட்டுகிறேன். இந்த சிறப்பு குழந்தைகள் தங்கள் ஆற்றலை அதிக அளவில் மேம்படுத்தும் வகையில் ஊக்குவிக்கும் உங்களை நான் வணங்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.