பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டம் விரைவில் மும்பையில் நடைபெறும்: சிவ சேனா

மும்பை: நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை குறித்து விவாதிக்க பாஜக அல்லாத முதல்வர்களின் கூட்டம் விரைவில் மும்பையில் நடத்தப்படும் என்று சஞ்சாய் ராவத் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நாட்டில் நடந்து வரும் வன்முறை மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பதைக் கண்டித்து,13 எதிர்கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.அதற்கு அடுத்த நாள் சிவ சேனா எம்பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி சஞ்சய் ராவத் தனது அறிக்கையில், ” நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க, பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டம் ஒன்று மும்பையில் விரைவில் நடைபெறும். இந்த விசயம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அல்லாத முதல்வர்களுக்கு ஏற்கனவே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இது குறித்து விவாதித்துள்ளனர். விரைவில் மும்பையில் அதுபோன்ற கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, வகுப்புவாத மோதலை தூண்டும் முயற்சிகள் போன்ற பிரச்சினைகள் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களின் வாக்காளர்களை கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காக, ராம நவமி, ஹனுமன் ஜெயிந்தி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நடந்த ஊர்வலங்கள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன. இவை அரசியல் கட்சிகளின் ஆதரவுடனே அரங்கேற்றப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவிலும், ஒரு இந்து ஓவைசியால் ஹனுமன் ஜெயந்தி அன்று அமைதியைக் கெடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் மக்களும் காவல்துறையினரும் பொறுமையாகவும் வலிமையாகவும் உள்ளனர். மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கி பற்றிய பிரச்சினையை அரசாங்கத்துடன் விவாதித்திருக்கலாம். ஆனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.