IPL 2022 PBKS vs SRH: பவுலிங் மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய ஹைதராபாத்; பஞ்சாப் தோல்வி

IPL 2022, PBKS vs SRH Live Score Updates: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் போட்டிகளில் இன்றைய 28 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் அணியும் களமிறங்கின. இவ்விரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறும். எனவே இரு அணிகளும் போட்டியை வெல்ல முனைப்புடன் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணி விளையாடும் 11 வீரர்களின் விவரம்: தவான், ப்ரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, ஷாரூக்கான், ஒடியன் ஸ்மித், ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்

ஹைதராபாத் அணி விளையாடும் 11 வீரர்களின் விவரம்: அபிஷேக் ஷர்மா, வில்லியம்சன், ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், சுஜீத், புவனேஷ்வர் குமார், ஜென்சன், உம்ரான் மாலிக், நடராஜன்

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 11 பந்துகளைச் சந்தித்த தவான், புவனேஷ்வர் பந்தில் ஜென்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ப்ரப்சிம்ரன் நடராஜன் பந்தில் பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 11 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பேர்ஸ்டோ 12 ரன்களில் சுஜீத் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். சிறிது நேரத்திலேயே ஜிதேஷ் ஷர்மாவும் 11 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டனும் ஷாரூக்கானும் அணியின் எண்ணிக்கையை உயர்த்த போராடினர். பொறுமையாக ஆடிய ஷாரூக்கான் 28 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய லிவிங்ஸ்டன் அரை சதம் அடித்தார். அணியின் எண்ணிக்கை 151 என இருந்தபோது லிவிங்ஸ்டன் அவுட் ஆனார். அவர் 33 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்ததாக அணி ஒரு ரன் கூட சேர்க்காமல் ஆல் அவுட் ஆனது. ஒடியன் ஸ்மித் 13 ரன்களில் அவுட் ஆக, அடுத்த வந்தவர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர். கடைசி ஓவரில் ரன் எதும் இல்லாமல் 4 விக்கெட் வீழ்ந்தது.

இதனையடுத்து பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹைதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும், மாலிக் 4 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

ஹைதராபாத் பேட்டிங்

152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில், தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அபிஷேக் வர்மா மற்றும் ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அபிஷேக் 31 ரன்களிலும், திரிபாதி 34 ரன்களிலும் ராகுல் சாஹர் பந்தில் ஷாரூக்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். அடுத்து ஜோடி சேர்ந்த மார்க்ரம் மற்றும் பூரண் பஞ்சாப் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். மார்க்ரம் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, பூரன் 30 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து பஞ்சாபை வீழ்த்தியது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்களும், ரபாடா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.