சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்கொடுத்த விவகாரத்தில், டிடிவி.தினகரன் வரும் 21-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி.தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசி, ரூ.2 கோடி முன்பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையின்போது, டிடிவி.தினகரன் முன் பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். சுகேஷின் இந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு டிடிவி.தினகரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
அதன்பேரில் கடந்த 12-ம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் 21-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிடிவி.தினகரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்அனுப்பி உள்ளது.