திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் இறுதியில் இருந்து இதுவரை புயல் மற்றும் இடி, மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி திரிபாதி கூறும்போது, கடந்த 14ந்தேதியில் இருந்து 3 நாட்களில் 1,410 கிராமங்களை உள்ளடக்கிய 80 வருவாய் வட்டங்களை கொண்ட 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி, மின்னல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 14ந்தேதி பலத்த வேகத்துடன் புயல் காற்று வீச தொடங்கியதுடன் இடி, மின்னலும் தாக்கியுள்ளது. இதனால், 95,239 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டங்களில், மொத்தம் 1,333 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.
புயலை தொடர்ந்து கனமழையும் பரவலாக பெய்து வருகிறது. இதனால், அசாமில் வீடுகள், பள்ளி கூடங்கள் மற்றும் அரசு, தனியார் கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.
புயலுக்கு தின்சுகியா, திப்ரூகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 8 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் ஏப்ரலில் 19 பேர் (ஏப்ரல் 17ந்தேதி வரை) மற்றும் மார்ச் மாத இறுதி வாரத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.
புயல் மற்றும் இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய அறிக்கை ஒன்றின்படி, நேற்று முன்தினம் வரை 3 ஆயிரத்து 11 வீடுகள் முழு அளவில் சேதமடைந்து உள்ளன. 19 ஆயிரத்து 256 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அசாமில் ஏற்பட்ட சேத விவரங்களை ஆய்வு செய்ய வட்ட அளவிலான குழுக்களை அரசு அமைத்து உள்ளது. இதனடிப்படையில், விரிவான சேதவிவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு நிதி உதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.