காபூல் : ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக பாகிஸ்தானுக்கு, அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறின. இதையடுத்து நாட்டின் நிர்வாகத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்தாண்டு ஆக.ல் கைப்பற்றியது.ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் சமீபத்தில் பாகிஸ்தான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து தலிபான் அமைப்பு நேரடியாக எச்சரிக்கை விடுத்தது.இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாட்டின் இடைக்கால அரசின் செய்தித் துறை இணையமைச்சருமான ஜபீவுல்லா முஜாஹித் நேற்று கூறியதாவது:
எங்கள் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கிறோம். எந்தப் பிரச்னைக்கும் பேச்சின் வாயிலாக தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம். இது போன்ற ஏவுகணை தாக்குதல்கள் இனி தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இரு நாட்டுக்கும் இடையே தேவையில்லாத பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகளையே வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தவர்கள் நாங்கள். நாட்டை பாதுகாக்க எதற்கும் துணிந்தவர்கள் நாங்கள் என்பதை உணர வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களின் பொறுமைக்கு மீண்டும் சோதனை ஏற்படாமல் பாகிஸ்தான் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement