புதுடெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் கரோனா பாதிப்பு 90% அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2020 ஜனவரியில் கேரள மாநிலத்தில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். தமிழகத்தில் மார்ச் 2020ல் கத்தாரில் இருந்து திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா உறுதியானது. அதன் பின்னர் இந்தியா மூன்று அலைகளைச் சந்தித்துவிட்டது. இதில் இரண்டாவது கரோனா அலையின் போது இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகமாக காணப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய சிக்கல்கள் எழுந்தன. ஆனால் 2021 ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து இந்தியா கரோனா தடுப்பூசித் திட்டத்தை வேகப்படுத்தியது. இதனால், இப்போது வரை இந்தியாவில் 186 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக 1000க்கும் கீழ் பதிவாகி வந்த கரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 90% அதிகரித்துள்ளது. அதாவது புதிதாக 2,183 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 2,183 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 4,30,44,280 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,965 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 11,542 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1985 பேர் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் கரோனாவிலிருந்து 4,25,10,773 பேர் குணமடைந்தனர்.
அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 0.83% ஆக உள்ளது. (பாசிடிவிட்டி விகிதம் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விவரம்)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 940 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 517 பேருக்கும், ஹரியாணாவில் 191 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 135 பேருக்கும், மகாராஷ்டிராவில் 127 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று உறுதியானது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் இந்தியாவில் அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. பொதுமக்கள் தங்கள் நலம் கருதி கைகழுவுவதல், கூட்டங்களை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல் ஆகியனவற்றை பின்பற்றலாம் என்று அறிவுறுத்தியது.
இந்நிலையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் XE திரிபு பரவுகிறதா என்ற சோதனைகள் நடைபெற்று வருகின்றன.