கொலம்பியா : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் வர்த்தக மையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண தலைநகரான கொலம்பியாவில், ‘கொலம்பியானா’ என்ற மிகப் பெரிய வர்த்தக மையம் உள்ளது. வாரக் கடைசி நாளான நேற்று முன் தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் காயம் அடைந்தனர்.இதில் ஒன்பது பேர் துப்பாக்கி குண்டு பட்டு காயம் அடைந்தனர். மீதமுள்ள ஐந்து பேர், தப்பி செல்கையில் காயம் அடைந்தனர். ‘இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை’ என, போலீசார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். தற்போது, 22 வயதான ஜுவேன் எம்.பிரைஸ் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.இவர்கள் மூவருக்கும் தொடர்புள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Advertisement