வன்முறைக்கு வித்திட்ட வாட்ஸ்ஆப் பதிவு – 40 பேர் கைது

கர்நாடகாவில் ஒருவரது வாட்ஸ்ஆப் பதிவு வன்முறைக்கு வித்திட்ட நிலையில், அது தொடர்பாக 40 பேரை கைதுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் ஒருவர் தனது வாட்ஸ்ஆப் பதிவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், அது மற்றவர்களுக்கு வேகமாக பரவியது. இதுதொடர்பாக மற்றொரு சமூகத்தினர் புகார் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தது. இதற்கிடையே சர்ச்சைக்குரிய வாட்ஸ்ஆப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சமூகத்தினர் காவல்நிலையம் முன் கும்பலாக திரண்டு கற்களை வீசி தாக்கினர். காவல்துறையினர் மீதும் அவர்களது வாகனங்கள் மீதும் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
image
image
இதைத்தொடர்ந்து கும்பலைக் கலைக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதுடன் தடியடியும் நடத்தினர். மோதலில் 12 காவல்துறையினர் காயமடைந்ததுடன் காவல்துறையின் 7 வாகனங்களும் சேதமடைந்தன. வன்முறை மேலும் பரவுவதைத் தடுக்க ஹுப்பள்ளி நகரில் வரும் புதன்கிழமை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறையை தூண்டுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எச்சரித்தார். இதற்கிடையில் வன்முறையில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.