கார் விபத்தில் தமிழக வீர‌ர் உயிரிழப்பு – தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற போது நேர்ந்த சோகம்

ஷிலாங்க்,
83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் டிரைவர் மற்றும் எஞ்சிய 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், விபத்தில் படுகாயமடைந்த கார் டிரைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கார் விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றபோது கார் விபத்தில் தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.