மங்களூரு-தொடர் மழையால் மங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் தும்பே அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பியதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தட்சிண கன்னடாவில் பரவலாக மழை பெய்கிறது. மங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கும் தும்பே அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.பொதுவாக ஏப்ரல் இரண்டாம் வாரம், அணையில் ஐந்து அடி தண்ணீர் மட்டுமே இருக்கும். கோடைக்காலம் முடியும் வரை, இந்த தண்ணீர் போதாது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.சூழ்நிலையை சமாளிக்க, மங்களூரு மாநகராட்சி தவணை நடைமுறையில், குடிநீர் வழங்கும். ஆனால் இம்முறை மழை பெய்ததால் அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.போதுமான அளவு இருப்புள்ளதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைத்துள்ளது.மங்களூருடன், பன்ட்வால், பெல்தங்கடி, புத்துார், சுள்யா உட்பட பல இடங்களிலும் மழை பெய்தது. குடிநீருடன், விவசாய பணிகளுக்கும் தண்ணீர் கிடைத்துள்ளது.விவசாய பம்ப் செட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மின்சார பயன்பாடும் குறைந்துள்ளது.
Advertisement