பெங்களூருவில் நகை, பணம் ஏதும் கிடைக்காத விரக்தியில் திருடர்களால் கத்தியால் குத்தப்பட்ட சிறுவனுக்கு 36 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
பெங்களூரு ரிச்மண்ட் டவுன் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் லாரல் லேன் பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனை பைக்கில் நீண்ட நேரம் பின்தொடர்ந்த இருவர், ஆள் அரவமற்ற பகுதியில் அவனை வழிமறித்து விலைமதிப்பற்ற பொருட்களைக் கேட்டு தடுத்து நிறுத்தினர். சிறுவன் மதிப்புமிக்க பொருள் எதுவும் இல்லை என்று மறுத்ததால், அவர்கள் சிறுவனை மிரட்டத் துவங்கினர். அவன் எதிர்த்ததால், கைகலப்பு ஏற்பட்டு, விரக்தியில் இருந்த திருடர்கள் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சிறுவன் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குச் சென்று, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அதற்கு முன்பு தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் பௌரிங் மற்றும் விக்டோரியா மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டான் . சிறுவனுக்கு 36 தையல்கள் போடப்பட்டு இப்போது வீட்டில் குணமடைந்து வருகிறான்.
இது தொடர்பாக அசோக் நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர், ஆனால் அவர்கள் இதுவரை திருடர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. தனியார் கல்லூரிகளுக்கு அருகில் மாணவர்களிடம் திருடர்கள் பணம் கேட்டு மிரட்டுதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டினர். சில சந்தர்ப்பங்களில், குற்றவாளிகள் 18 வயது கூட நிரம்பாத சிறார்களாக இருப்பதாகவும் திருட்டு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
மத்திய பெங்களூருவில் அமைந்துள்ள ரிச்மண்ட் டவுன் பெங்களூரின் ஆடம்பரமான இடங்களில் ஒன்றாகும். அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM