KGF -2 : கிரீன் சிக்னல் தந்ததா ரெட் ஜெயன்ட் ?! படத்துக்கு கூடுதல் காட்சிகள் கிடைத்த பின்னணி இதுதான்!

கடந்த வாரம் விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் யஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின. அந்தப் படங்களைத் தொடர்புபடுத்தி, கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் பல தகவல்கள் வலம் வருகின்றன. ‘சரியாகப் போகாத ‘பீஸ்ட்’ படத்துக்காக சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற கே.ஜி.எஃப் 2 படத்துக்குத் தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் தடுக்கப் படுகிறது’ என்பதுதான் அந்த தகவல்.

அதாவது வசூலைக் குவிக்கும் ‘கே.ஜி.எஃப் 2 படத்தைத் திரையிட விரும்பிய தியேட்டர் உரிமையாளர்களுக்கு, ‘அப்படியெல்லாம் பண்ண முடியாது’ என ஒருவிதமான மிரட்டல் விடுக்கப் பட்டது’ என்பதுதான் அந்தப் பேச்சுக்களின் மையக் கருத்து. ’திமுக ஆட்சிக்கு வந்தால் சினிமாவில் இப்படியான ஆதிக்கம் சகஜம்தான்’ என இந்தப் பேச்சுக்கள் அப்படியே அரசியல் களத்தையும் எட்டத் தொடங்கின.எனவே, உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது’ என கோடம்பாக்கத்தில் சிலரிடம் பேசினோம். முதலில் சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேஷிடம் பேசினோம்.

‘’பீஸ்ட்’ விஜய் படம்கிறதால முதலில் அதிகமான எண்ணிக்கையில் அதாவது சுமார் 850 தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன. பெரிய ஸ்டார் படத்துக்கு இப்படி திரையரங்குகள் புக் ஆகறது வழக்கமானதுதான். கே.ஜி.எஃப் முதல் பார்ட் நல்லா ஓடினாலும்கூட ரெண்டாவது பார்ட்டுக்கு 200 தியேட்டர்கள் வரை புக் பண்ணியிருந்தாங்கங்கிறதுதான் நிஜம். என்னதான் எதிர்பார்ப்பு இருந்தாலும் விஜய் படத்தோட ஒப்பிடறப்ப எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்? ரெண்டு படங்களுக்கும் புக் ஆகியிருந்த தியேட்டர்கள் குறித்த நிஜமான புள்ளி விப்ரம் இதுதான்.

Beast | பீஸ்ட்

இப்படியிருக்க, படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில கே.ஜி.எஃப் 2-க்கு அதிகமான வரவேற்பு கிடைச்சதா தெரியுது. ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைக்குதுங்கிறபோது, அந்தப் படத்தை வெளியிடாத தியேட்டர்கள் படத்தை வெளியிட விரும்பறது சகஜம்தான். அப்படித்தான் கே.ஜி.எஃப் 2 படத்தை வெளியிட விரும்பினாங்க சில தியேட்டர் உரிமையாளர்கள். ஆனா அங்க ஏற்கெனவே ’பீஸ்ட்’ ஓடிட்டிருக்கறதால ‘என்ன பண்றது’னு அவங்களுக்கு ஒரு தயக்கம். இந்தத் தயக்கம் குறித்து நாலு பேர்கிட்ட பேசறப்ப, அப்படியே அது வேற மாதிரியான செய்தியாப் பரவியிருக்கு. ஆனா இதன் பின்னணியில நடந்தது என்னன்னா, கே.ஜி.எஃப் 2க்கு கூடுதலா தியேட்டர்கள் கிடைச்சா நல்லா இருக்கும்னு நினைச்சதுமே, அதன் வெளியீட்டாளர்கள், ‘பீஸ்ட்’ விநியோகஸ்தரான ‘ரெட் ஜெயன்ட்’ தரப்புகிட்ட நேரடியாப் பேசிட்டாங்க.

ஏற்கெனவே அந்தப் படத்தின் ரிசல்ட் குறித்து ‘ரெட் ஜெயண்ட் தரப்புமே தெரிஞ்சு வச்சிருந்ததால, ‘ரசிகர்கள்கிட்ட வரவேற்பு கிடைக்குதுன்னா ஓட்டிட்டுப் போகட்டுமே, ஒரு காட்சி வேணும்னா எடுத்துக்கச் சொல்லுங்க’ன்னு உடனே அவங்க தரப்புல இருந்து கிரீன் சிக்னல் கிடைச்சதுங்கிறதுதான் நிஜம். இதனாலேயே இன்று முதல் (18/4/22) கூடுதலான தியேட்டர்கள்ல ஒரு காட்சி கே.ஜி.எஃப் 2 வைத் திரையிட முடிவு செய்திருக்காங்க’’ என்றார் இவர்.

சினிமா மக்கள் தொடர்பாளர் ராதா கண்ணனிடம் இது தொடர்பாகப் பேசியபோது, ‘ஒரு பெருந்தன்மையுடன் ரெட் ஜெயன்ட் தரப்பு இந்த விஷயத்துல ஒத்துழைப்பு தந்திருக்காங்கன்னுதான் சொல்லணும். இது ஒரு ஆரோக்கியமான போக்கு. தமிழ் சினிமாவுக்கு இந்த மாதிரியான நடவடிக்கைகள்தான் தேவை. அதேநேரம் நம்மூர் பெரிய ஹீரோக்கள் கதையில கூடுதல் கவனம் செலுத்தினா மட்டுமே இனி வருங்காலங்கள்ல இந்த மாதிரியான பிரச்னையில இருந்தெல்லாம் தப்பிக்க முடியும்’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.