FA கோப்பை பைனலில் லிவர்பூல், செல்சீ! டீம் செலக்‌ஷனால் தோற்றதா மான்செஸ்டர் சிட்டி?

FA கோப்பை இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் மற்றும் செல்சீ அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இந்த வார இறுதியில் நடந்த அரையிறுதிப் போட்டிகளில், லிவர்பூல் அணி மான்செஸ்டர் சிட்டியையும்; செல்சீ அணி கிறிஸ்டல் பேலஸையும் வீழ்த்தின. இங்கிலாந்தின் பழமையான கால்பந்து தொடர் FA கோப்பை. 1871ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடர், 151 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிருக்கிழமைகளில் வெம்ப்ளி மைதானத்தில் நடந்தது. சனிக்கிழமை நடந்த முதல் அரையிறுதியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை எதிர்கொண்டது.

FA கப் என்பதால், பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்தார் மான்செஸ்டர் சிட்டி மேனேஜர் பெப் கார்டியோலா. கோல்கீப்பர் எடர்சனுக்குப் பதில் ஜேக் ஸ்டெஃபான் களமிறக்கப்பட்டார். நாதன் அகே, ஜின்சென்கோ, ஃபெர்னாண்டினோ போன்ற வீரர்களும் இப்போட்டியைத் தொடங்கினார்கள். லிவர்பூல் அணியில் முன்னனி வீரர்கள் அனைவருமே களமிறங்கினர். ஜோடா, ஃபிர்மினியோ இருவரும் இல்லாமல், மனேவை ஃபால்ஸ் 9 பொசிஷனில் களமிறக்கினார் கிளாப்.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே கோலடித்தது லிவர்பூல். மனே அடித்த ஷாட் ஸ்டோன்ஸ் மீது பட்டு வெளியேற, லிவர்பூலுக்கு கார்னர் கிடைத்தது. அந்த கார்னரை பெனால்டி பாக்சுக்குள் அனுப்பினார் ஏண்டி ராபர்ட்சன். அதை சிறப்பாக ஹெட்டர் செய்து கோலடித்தார் லிவர்பூல் டிஃபண்டர் இப்ராஹிமோ கொனாடே.

அடுத்த 7 நிமிடங்களீல் இன்னொரு கோலையும் அடித்தது லிவர்பூல். ஸ்டோன்ஸ் கொடுத்த மைனஸ் பாஸை ஸ்டெஃபன் சரியாக கிளியர் செய்யாமல் போக, அதைப் பயன்படுத்தி கோலடித்தார் சாடியோ மனே. மான்செஸ்டர் சிட்டி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முதல் பாதியிலேயே மூன்றாவது கோலையும் அடித்தது லிவர்பூல். மான்செஸ்டர் சிட்டி டிஃபண்டர்களைத் தாண்டி, தியாகோ ஒரு லாஃப்டட் பாஸ் கொடுக்க, அதை கோலாக்கினார் மனே. நினைத்துப் பார்க்க முடியாத முடிவோடு முதல் பாதி முடிவுக்கு வந்தது.

Sadio Mane

எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவது பாதியை மிகச் சிறப்பாகத் தொடங்கியது மான்செஸ்டர் சிட்டி. லிவர்பூல் டிஃபண்டர்களை ஏமாற்றி மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் பந்தோடு முன்னேறினார்கள். கேப்ரியல் ஜீசுஸ் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பை கோலாக்கினார் ஜேக் கிரீலிஷ். அதன்பிறகு தொடர்ச்சியாக அட்டாக்குகளை மேற்கொண்டது மான்செஸ்டர் சிட்டி. பெர்னார்டோ சில்வா, கேப்ரியல் ஜீசுஸ் ஆகியோரால் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் கோலடித்து, போட்டியை 3-2 என மாற்றினார் மான்செஸ்டர் சிட்டி நடுகள வீரர் பெர்னார்டோ சில்வா. அதன்பிறகு சில வாய்ப்புகளை உருவாக்கியது சிட்டி. மாரஸ், ஸ்டெர்லிங் ஆகியோர் அடித்த ஷாட்கள் கோலாகமல் போக, ஆட்டம் 3-2 என முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதியில் செல்சீ அணி கிறிஸ்டல் பேலஸை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும் செல்சீயால் கோல்கள் எதுவும் அடிக்க முடியவில்லை. அவர்கள் அடித்த பெரும்பாலான ஷாட்கள் பேலஸ் கோல்கீப்பரை சோதிக்காமல் வெளியிலேதான் சென்றன. இந்நிலையில் நடுகள வீரர் மடியோ கோவசிச் காயம் காரணமாக வெளியேறினார். 36-வது நிமிடத்தில் கிறிஸ்டல் பேலஸுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எசீ அடித்த ஃப்ரீ கிக்கை முதலில் செல்சீ கிளியர் செய்ய, அதை கொயூடே கோல் நோக்கி அடிக்க, மெண்டி ஒருவழியாகத் தடுத்தார். அந்த ரீபௌண்டை ஜொயாகிம் ஆண்டர்சன் மேலே அடித்துவிட, நல்ல வாய்ப்பு பறிபோனது. இதனால் முதல் பாதி 0-0 என முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியிலும் இதேபோல் ஒரு நல்ல வாய்ப்பு கிறிஸ்டல் பேலஸுக்கு கிடைத்தது. கார்னரை பெனால்டி ஏரியாவுக்கு எசீ அனுப்ப, அதை ஹெட்டர் செய்தார் கொயூடே. ஆனால், அது வெளியே சென்றுவிட்டது. இந்த வாய்ப்பு தவறிய அடுத்த 2 நிமிடங்களில், செல்சீ கோலடித்தது. மிட்செலிடம் இருந்து கேப்டன் ஆஸ்பிளிகியூடா பந்தைப் பிடிங்கி பாஸ் செய்ய, பெனால்டி ஏரியாவுக்குள் இருந்த ஹாவர்ட்ஸுக்கு அனுப்பப் பட்டது அந்தப் பந்து. அவர் அடித்த ஷாட்/கிராஸ் பேலஸ் வீரர் மீது பட்டு ரீபௌண்ட் ஆக, அதை அற்புதமாக கோலாக்கினார் மாற்று வீரராக வந்த ரூபன் லோஃப்டஸ்-சீக்.

Mason Mount

ஆட்டத்தை சமன் செய்ய பேலஸ் பல மாற்றங்கள் செய்துகொண்டிருக்க, இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை முடித்தது செல்சீ. மேசன் மவுன்ட், டிமோ வெர்னர் இருவரும் 1-2 ஆட, பாக்சுக்குள் புகுந்த மவுன்ட்டின் பாதையில் பந்தை அனுப்பினார் வெர்னர். அதை அற்புதமாக கோலாக்கினார் மேசன் மவுன்ட். கடைசி நிமிடங்களில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை வழக்கம்போல் ரொமேலு லுகாகு தவறவிட, ஆட்டத்தை 2-0 என வென்றது செல்சீ. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக FA கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது அந்த அணி. கடந்த இரண்டு இறுதிப் போட்டிகளையும் தோற்றிருக்கும் நிலையில், வரும் மே 14ம் தேதி லிவர்பூலை எதிர்கொள்கிறது அந்த அணி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.