‘இளையராஜாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இளையராஜாவிற்கு எம்.பி பதவி கொடுத்து அடக்கிவிட வேண்டாம் என்றும், பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத, தமிழக பாஜக தயாராக உள்ளது எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, துப்புரவ பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுடன் அமர்ந்து சம்பந்தி போஜனம் அருந்தும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் உடன் உணவருந்தினர்.

தொடர்ந்து போரூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. இளையராஜா பாஜகவை சார்ந்தவர் அல்ல. எனவே பாஜகவின் சார்பில், ராஜ்யசபா எம்பி ஆக்குவார்கள் என சொல்லமுடியாது. தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம்” என்று கூறினார்.

image

மேலும், இளையராஜாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு அவர் பொருத்தமானவர் என்று கூறிய அண்ணாமலை, இளையராஜாவிற்கு எம்பி பதவி கொடுத்து அடக்கிவிட வேண்டாம் எனவும், பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட வேண்டும் எனவும், இதுகுறித்து தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத தமிழக பாஜக தயாராக உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.

புளூ கிராஃப் பவுண்டேசன் பதிப்பித்த புத்தகத்தில் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கரை வைத்து அரசியல் மட்டும் செய்யும் கட்சிகள், எழுத்தாளர்கள், இடதுசாரிகள் எதிர் கருத்து தெரிவித்தும், இளையராஜாவை மோசமாக விமர்சித்தும் பேசுகிறார்கள். திமுக ஐடி விங் ட்ரெண்ட் செய்தனர். அதனால் தான் கேள்வி கேட்பதாகக் கூறிய அவர், சமூக நீதி பேசும் நீங்களே சொல்லும் கருத்தை புறகணிக்கலாமா என்றும், இது போலி சமூக நீதி என்றும் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, 11 மசோதாக்களுக்கு ஆளுநர் கேட்டுள்ள விளக்கங்களை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றார். நீட் தொடர்பாக ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், அதில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளன எனவும் அவர் கூறினார்.

image

மேலும் அவர் பேசுகையில், “அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநரை மிரட்டுகிறார்கள். நாளை திருவாடுதுறை செல்லும் ஆளுநருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்புக் காட்டுவது தவறு. கவர்னரை தடுத்து நிறுத்தினால், விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

திமுக, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து கொண்டால், அவருக்கு பாஜக வரவேற்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார். ஆளுநரை குற்றம் சொல்லும் முன், மம்தா, தாக்கரே, கே.சி.ஆர், மு.க ஸ்டாலின் போன்றவர்கள் ஆளுநர்களை குற்றம் சொல்ல என்ன தகுதி என்று யோசித்து பார்க்க வேண்டும் என்றும் அவர் சாடினார்.

கோயில்களில் விவிஐபி தரிசனம் கிடையாது என அரசு ஒரு திட்டத்தை போட்டால், அதை ஆதரிக்கும் முதல் கட்சி பாஜகவாக தான் இருக்கும் என்று கூறிய அவர், ஏற்கனவே ஒதுக்கிய நிதியையே அறநிலையத்துறை என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.