கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு பயன்

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேர் பயனடைய உள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (23). கடந்த 16-ம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். பின்னர், மேல் சிகிச்சைக்காக நேற்று (ஏப்.17) அதிகாலை கோவை அரசு மருத்துவமனையின் விபத்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருத்துவர், இருதய மருத்துவர் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஹரிஹரன் உயிரிழந்தார். அவரது உறவினர்களிடம் உடல் உறுப்புதானம் தொடர்பாக மருத்துவர்கள் விளக்கினர். இதையடுத்து, உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். உடனடியாக உறுப்புகள் தானம் செய்வதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக மருத்துவமனையில் டீன் நீர்மலா கூறும்போது, ”ஹரிஹரனின் இரு சிறுநீரகங்களில் ஒன்று, இங்கு தொடர் டயாலிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கும் அளிக்கப்பட்டது. கல்லீரல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. இரண்டு கண்கள் தனியார் கண் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் பார்வையிழந்த இருவருக்கு பயன்பட உள்ளது. ஹரிஹரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று மாலை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்” என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.