ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பல வாரங்களாக யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ரஷ்யக் கப்பற்படையின் ஏவுகணைக் கப்பல் ஒன்று தீப்பிடித்து நீரில் மூழ்கும் வீடியோ வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், ரஷ்யாவின் மிகப்பெரிய போர்க்கப்பல்களுள் ஒன்றான `மோஸ்க்வா’ ஏவுகணை கப்பல் புகை சூழ நீரில் மூழ்குகிறது. கடந்த வாரம் உக்ரைன் கடற்படை கப்பல் தாக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலால் ரஷ்யாவின் கடற்படைக்குச் சொந்தமான 186 மீட்டர் நீளமுள்ள மோஸ்க்வா ஏவுகணை கப்பல், தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ தொடர்பாக இராணுவ ஆய்வாளர் ராப் லீ தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரேனிய நெப்டியூன் எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல் போல தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார். உக்ரைன் ராணுவ அதிகாரிகள், “உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட நெப்டியூன் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல்” என உறுதிப்படுத்துகின்றனர்.