கிழங்கு மாவில் தட்டு, குவளை, கரண்டி.. பயன்பாட்டுக்குப் பின் உணவாகும் பொருட்கள்..!

திருச்சியைச் சேர்ந்த தொழில்முனைவர் ரவிச்சந்திரன் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், கிழங்கு மாவில் தட்டு, குவளை, கரண்டி ஆகியவற்றைத் தயாரித்துள்ளார். பயன்பாட்டுக்குப் பின் உணவாவதே அவர் தயாரிப்புகளின் சிறப்பாகும்..

திருச்சியைச் சேர்ந்த தொழில் முனைவர் ரவிச்சந்திரன். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கப் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த இவர், கிழங்கு மாவில் பொருட்களைத் தயாரிக்க நொச்சியத்தில் 40 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்சாலை அமைத்துத் தட்டுகள், குவளைகளைத் தயாரித்து விற்று வருகிறார்.

மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, கோதுமை, தென்னங்குருத்து, உருளைக்கிழங்கு ஆகியவற்றைக் காயவைத்து மாவாக அரைத்துத் தட்டு, குவளை, கரண்டி ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார்.

மாவால் தயாரிக்கப்படும் தட்டுகளில் உணவருந்திய பின், தட்டுகளை அப்படியே கடித்துத் தின்னலாம் என்றும், நீரில் போட்டால் கரைந்து மீன்களுக்கு உணவாகும் என்றும், மண்ணில் போட்டால் மட்கி உரமாகும் என்றும் கூறுகிறார் ரவிச்சந்திரன்..

மாவால் தயாரிக்கும் தட்டுகள் குவளைகளைப் பயன்பாட்டுக்குப் பின் ஆடு மாடுகளுக்கு உணவாக அளிக்கலாம் என்றும், கிழங்கு மாவைக் கொண்டே தயாரிப்பதால் இவற்றைக் கோவில்களிலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கிறார்.

வேதிப்பொருள் கலக்காமல், நூறு விழுக்காடு இயற்கைப் பொருளால் தயாரித்த குவளைகள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுள்ள வெந்நீரையும் தாங்கும் எனத் தெரிவிக்கிறார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துச் சூழலைக் காக்கும் இவ்வகைப் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறும் ரவிச்சந்திரன், பெருமளவில் உற்பத்தி செய்ய மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.