தேனி: சாணத்தில் நகையெடுத்தவர், காவல் நிலையத்தில் நூலகம் அமைத்தார்; இன்ஸ்பெக்டருக்குப் பாராட்டு மழை!

பெரும்பாலும் காவல் நிலையங்களுக்கு வருவோர் அச்சமும், தயக்கமும் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக புகார் மனு அளிக்க வருகையில் சில நேரங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதல்முறையாக தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் 20 பேர் அமர்ந்து படிக்கும் அளவிற்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சின்னமனூர் காவல் நிலையம்

சின்னமனூர் காவல் நிலைய வளாகத்திற்குள் நுழையும்போதே அழகான பூங்காவிற்கு செல்வது போன்றே இருக்கிறது. வளாகத்தைச் சுற்றிலும் தொட்டிகளில் பூ மற்றும் அலங்காரச் செடிகள் வரிசையாக வைத்து பராமரிக்கப்படுகின்றன. தூய்மையாக இரண்டு இடங்களில் குடிக்க குடிநீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்திற்கு ஒரு குப்பையைக்கூட எடுத்துவிட முடியாத அளவிற்கு தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த காவல் நிலையத்தின் ஆய்வாளரே காரணம் என்கின்றனர் சக போலீஸார்.

இன்ஸ்பெக்டர் சேகர்

இதுகுறித்து அறிய சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகரிடம் பேசினோம். “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நான் திண்டுக்கல், பழநி, அல்லிநகரம், போடி உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வாளராக பணியாற்றிவிட்டு, கடந்த 9 மாதங்களாக சின்னமனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். காவல் நிலையங்களுக்கு வரும் மனு கொடுக்கவரும் புகார் தாரர்களால் அனைவரிடமும் விசாரித்து உண்மைத் தன்மை அறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக நடைமுறைகள் படிப்படியாக நடக்கும். இதனால் காவல் நிலையம் வரும் மனுதாரர்களிடம் உடனடியாக மனுக்களை பெற முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் விசாரணை தொடர்பாக எஸ்.ஐ உள்ளிட்ட போலீஸார் வெளியே சென்றிருப்பார்கள். அந்த நேரங்களில் மனு கொடுக்க வருவோர் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான், செய்திதாள்களை மட்டும் கொண்ட சிறு நூலகத்தைத் தொடங்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

நூலகம்

ஆனால், காவல் நிலையத்தில் நூலகம் தொடங்கலாம் என காவல் உயர் அதிகாரிகளிடமும், சக போலீஸாரிடம் தெரிவித்தவுடன் ஏன் சிறிய அளவில் நன்றாக செய்யலாம் என ஊக்கமளித்தனர். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடமும் தெரிவித்தோம். அவர்களும் நூலகம் அமைவதற்கு நல்ல வரவேற்பை தெரிவித்தனர். இதனால் காவல் நிலையத்திற்கு உள்பட்ட வலதுபுறம் இருந்த குப்பை மேடான பகுதியை சீரமைத்து அங்கே நூலகம் அமைக்க திட்டமிட்டோம். முழுமையான பணிகளை முடிக்க 2 மாதங்கள் ஆகின. இதற்கு அருகே உள்ள பொதுமக்களும் உறுதுணையாக இருந்தனர். கட்டடம், மேற்கூரை, மேஜை, இருக்கைகள் என பலரும் தாமாக முன்வந்து செய்து கொடுக்கத் தொடங்கினர். நூலகத்திற்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஆயிரம் புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரிகளும் வைக்கப்பட்டன.

வாசகர்கள்

இதற்கிடையே சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே எனது நண்பர்களிடம் காவல் நிலையத்தில் நூலகம் அமைத்து வருவாதத் தெரிவித்திருந்தேன். அவர்களும் அங்குள்ள புத்தக நிலையத்தாரும் சேர்ந்து இலவசமாக நூறு புத்தகங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் புத்தகங்களை நூலகத்திற்காக வழங்கத் தொடங்கினர். தற்போது இந்த நூலகத்தில் 800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அரசியல், அறிவியல், சட்டம், வரலாறு, நாவல்கள், சிறுகதை என பல வகைகளில் புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்காக தயாராவதற்கான வினா-விடை புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலகத்தை காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர்கள் மட்டுமில்லாமல், அருகே உள்ள மாணவ-மாணவிகளும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளோம் என்றார்.

நூலக்த்தில் உள்ள புத்தகங்கள்

காவல் நிலையங்களில் வைத்து தான் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்க போலீஸார் உரத்த குரலிலும், கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் காவல் நிலையங்களுக்கு புகார் மனு அளிக்கச் சென்றால் கூட ஒருவித பதட்டம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். அதைப்போக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தயக்கமின்றி பெண்கள் புகார் அளிக்க வருவதற்கு ஏதுவாக பெண்கள், குழந்தைகளுக்காக காத்திருப்பு அறை, குழந்தைகளுக்கான விளையாட்டு அறை ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் மனுதாரர்களுக்காக நூலகம் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்கு உரியது.

கடந்த வாரம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் நடந்த திருட்டு வழக்கில், அண்டாவில் சாண உருண்டைகளை போடவைத்து சாதுர்யமாக 12 பவுன் நகையை மீட்டு புகழ் பெற்ற காவல் ஆய்வாளர் சேகர் தான் சின்னமனூர் காவல் நிலையத்தில் நூலகத்தை அமைத்து அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.