சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் அணை பாதுகாப்பு அமைப்பின் அதிகாரத்தை கண்காணிப்புக் குழுவுக்கு அளிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தற்போது கேரள அரசுடன் நட்புடன் உள்ள தமிழக முதல்வர், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
ஜி.கே.மணி (பாமக), கம்பம்ராமகிருஷ்ணன் (திமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தவாக) ஆகியோரும் முல்லை பெரியாறு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “பெரிய அணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, இயக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, அணை பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள தனி அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணைக்கான கண்காணிப்பு குழுவிடம், அணை பாதுகாப்புக்கான அதிகாரத்தை ஒப்படைக்க தமிழக அரசு ஒப்புக்கொள்கிறதா என்பதுதான் பிரச்சினை. இதில் விரைவில் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.ஆனால், நமக்கு வேறு வழி இல்லை. வழக்கறிஞர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படித்தான் சொல்கின்றனர். எனவே, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து, முதல்வர் தான் இந்த முக்கிய பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டும். அவரது முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய சங்கங்கள் நன்றி: சட்டப்பேரவையில் அணை பாதுகாப்பு குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடந்த ஏப்.13-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்கத்தில் ‘அணைகள் பாதுகாப்புச் சட்டம்: தமிழகம் விழித்தெழுமா?’ எனும் தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியிருந்தார். சட்டப்பேரவையில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து, பேரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் விரிவான விளக்கம் அளித்து, கட்டுரையின் தன்மையை உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது.