விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணின் காதலர் ஹரிஹரன்(27), ஜுனைத் அகமது(27), மாடசாமி(37), பிரவீன்(22) உட்பட 4 பள்ளி மாணவர்களும் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸூக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சூடுபிடித்த வழக்கு விசாரணையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி.
இந்த நிலையில், சிறார்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி அவர்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி விருதுநகர் இளையோர் நீதி குழுமத்தில் சிறுவர்களின் பெற்றோர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மருதுபாண்டி சிறுவர்களை நிபந்தனை பேரில் ஜாமீனில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நான்கு சிறுவர்களும் ஜாமீனில் வீடு திரும்பினர். இந்த பரபரப்புக்கு மத்தியில் ஜாமீனில் வெளிவந்த சிறுவர்களின் தரப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் வழக்கு தொடர்பாக பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், “விருதுநகரைச் சேர்ந்த ஹரிஹரனுடன், பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமாகி பழகி வந்தோம். அப்போது ஊரகப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பணம் கொடுத்து ஹரிஹரன் உல்லாசமாக இருப்பதை தெரிந்துகொண்டோம். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி நாங்களும் பேசி வந்தோம். இந்த நிலையில் `வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும், கடைசி வரையில் பல ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை’ என அந்த இளம்பெண் கூறி எங்களை அழைத்தார். பாலியல் வன்கொடுமை செய்யத்தெரியாத எங்களை, இளம்பெண் அவருடைய செல்போனில் வைத்திருந்த ஆபாச படத்தைக்காட்டி இதேபோல் செய்ய வேண்டும் எனச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார். மேலும் `என்னுடன் பாலியல் உறவில் இருப்பது வெளியே தெரிந்தால் உங்களது எதிர்காலத்திற்கும், படிப்பிற்கும் பிரச்னை வரும்’ எனக்கூறி மிரட்டியதால் நாங்கள் இதை யாரிடமும் சொல்லவில்லை. தொடர்ந்து பலமுறை எங்களை செல்போனில் அழைத்து ஒவ்வொருவரையும் தனித்தனி நாளில் வரச்சொல்லி பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தினார்.
அவ்வாறு வரும்போது பணம் கொண்டுவர வேண்டும் எனக்கூறினார். அந்த பணத்தை வைத்துதான் அழகுசாதனப்பொருள்களும், கருத்தடை பொருள்களும் வாங்கிக் கொள்வேன் என இளம்பெண் கூறியதால் வீட்டுக்குத்தெரியாமல் பணம் கொண்டு வந்து கொடுத்தோம்.
இந்த நிலையில் திடீரென்று பாலியல் வன்கொடுமை வழக்கில் நாங்கள் கைது செய்யப்பட்டோம். அப்போது எங்களை விசாரித்த போலீஸ் அதிகாரியிடம் நடந்த விவரங்களை சொன்னபோது ‘பத்திரிகைகளில் இந்த விஷயம் பெரிய அளவில் வந்துவிட்டதால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைக்கிறோம்’ எனக் கூறி எங்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைத்தனர்.
பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து எங்களை விசாரித்த சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடமும், இளம்பெண் எங்களைக் கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபடுத்தியது பற்றி எடுத்துக் கூறினோம். அவர்களும், ‘இந்த விஷயம் பெரிய அளவில் பத்திரிகைகளில் பேசப்பட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டனர். இந்த நிலையில்தான், இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாக ஜாமீன் மனுத்தாக்கல் செய்து சிறுவர்களாகிய நாங்கள் ஜாமீன் கிடைத்து வீடு திரும்பினோம். 18 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். ஆனால் எங்களைக் கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபட வைத்த இளம்பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சிறுவர்கள் தரப்பில் புகார் மனு அளித்தவர்களிடம் பேசினோம். “இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. இளம்பெண்னே திட்டமிட்டு எல்லா காரியங்களையும் செய்துள்ளார். அவரின் ஆசைக்கு சிறார்கள் 4 பேரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். எனவே இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யக்கேட்டு புகார் மனு அளித்துள்ளோம். ஒருவேளை எங்களது புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்” என்றனர்.