பொருளாதார வளர்ச்சி.. தோற்றுப் போய் விட்டார் மோடி.. சொல்கிறார் பாஜக எம்.பி. சு.சாமி!

பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் கடந்த 8 வருடங்களில் பிரதமர்
நரேந்திர மோடி
தோற்றுப் போய் விட்டதாக பாஜகவைச் சேர்ந்த எம்.பி.
சுப்பிரமணியன் சாமி
கூறியுள்ளார்.

அக்கம் பக்கத்து நாடுகளில் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. இலங்கை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அங்கு அதிபர் கோத்தபயா ராஜபக்சேவையும், அவரது தம்பியும் பிரதமருமான மகிந்தா ராஜபக்சேவையும் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் நாடே அனலாகியுள்ளது.

இன்னொரு பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் அதே நிலைதான். அங்கும் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது. சீனாவிடம் வாங்கிக் குவித்த கடன்களை அடைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கடும் நெருக்கடி முற்றியது. கடைசியில் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

இந்த நிலையில் இந்தியாவிலும் பொருளாதார நிலைமை ஆரோக்கியமாக இல்லை என்று பலரும் எச்சரித்து வருகின்றனர். இந்தியா விரைவில் சுதாரிக்காவிட்டால் இலங்கை நிலைதான் ஏற்படும் என்றும் பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பாஜகவைச் சேர்ந்தவரும், பாஜக தலைமையை அடிக்கடி பகிரங்கமாக விமர்சிப்பவருமான சுப்பிரமணியன் சாமி, பிரதமர் மோடியை பகிரங்கமாக குற்றம் சாட்டி டிவீட் போட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், கடந்த 8 ஆண்டுகளில் பிரதமராக, பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் தோற்றுப் போய் விட்டார் நரேந்திர மோடி. மறுபக்கம் 2016ம் ஆண்டிலிருந்தே வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு மிகப் பெரிய அளவில் பலவீனமடைந்துள்ளது. சீனா குறித்து மோடிக்கு எந்த தெளிவும் இல்லை. மீண்டு வர வழிகள் உள்ளன. ஆனால் மோடிக்கு அது தெரியுமா? என்று கேட்டுள்ளார் சாமி.

சாமியின் இந்த டிவீட்டுக்கு ரிச்மேன் சுரேஷ் என்பவர் கொடுத்துள்ள பதிலில், உங்களது கூற்றிலிருந்து நான் மாறுபடுகிறேன். பிரதமர் பதவியில் மோடி அல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாக போயிருக்கும். பாகிஸ்தானியர்கள் போலவோ அல்லது இலங்கைக்காரர்கள் போலவே கத்திக் கொண்டிருந்திருப்போம். பிரதமர் மோடியின் முக்கியத்துவம், வேறு பிரதமர் யாரேனும் வந்தால்தான் தெரியும் என்று கூறியிருந்தார்.

அதற்கு சாமியே பதிலடி கொடுத்துள்ளார். இப்படித்தான் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுப் போகும்போது சொன்னார்கள்.. இங்கிலாந்து வெளியேறி விட்டால் இந்திய வீழ்ச்சி அடைந்து விடும் என்று, என சாமி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார நிலை சரியில்லை என்று செய்திகள் கூறினாலும் கூட இலங்கைக்கு தொடர்ந்து வாரி வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா என்பது நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.