கொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பி.யில் 6 மாவட்டங்களில் முக கவசம் கட்டாயம்..!!

லக்னோ, 
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், டெல்லியை ஒட்டிய 6 மாவட்டங்கள் மற்றும் லக்னோவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. டெல்லி, அரியானா அவற்றை ஒட்டி உத்தரபிரதேச எல்லைக்குள் அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றில் கொேரானா பரவல் உயர்ந்து வருகிறது.

தேசிய தலைநகர் பிராந்தியத்தை சேர்ந்த உத்தரபிரதேசத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 65 பேருக்கும், காசியாபாத் மாவட்டத்தில் 20 பேருக்கும் ஒரே நாளில் தொற்று உறுதியானது. இதையடுத்து, கொரோனா நிலவரம் குறித்து ஆராய உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-
உத்தரபிரதேசத்தை ஒட்டிய சில மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் பாதிப்பு, தேசிய தலைநகர் பிராந்திய மாவட்டங்களிலும் தென்படுகிறது. பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது, உடல்நிலை மோசம் அடைவது போன்ற சூழ்நிலை எழ வாய்ப்பில்லை.
அதே சமயத்தில், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். தேசிய தலைநகர் பிராந்திய மாவட்டங்களான கவுதம் புத்தா நகர், காசியாபாத், ஹபூர், மீரட், புலந்த்சாகர், பாக்பட் ஆகிய 6 மாவட்டங்களிலும், தலைநகர் லக்னோ மாவட்டத்திலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.
நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் கண்டறிந்து தடுப்பூசி போடச்செய்ய வேண்டும். சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் பேசினார்.
யோகி ஆதித்யநாத் உத்தரவை தொடர்ந்து, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள 6 மாவட்டங்களிலும், லக்னோ மாவட்டத்திலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.