அங்காரா : துருக்கி ராணுவம் மற்றும் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில், ஈராக் எல்லையில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள், 20 பேர் பலியாயாகினர்.
ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் மத்தியில் அமைந்துள்ள துருக்கி நாட்டின் வடக்கே குர்திஷ் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள், பி.கே.கே., எனும் அமைப்பின் கீழ் தனி நாடு கோரி பல ஆண்டுகளாக துருக்கிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். குர்திஷ் பிராந்தியம், ஈராக்கின் வடக்கிலும் விரிவடைந்துள்ளது. அதனால் அங்கு பி.கே.கே., ராணுவ முகாம்கள் அமைத்து துருக்கிக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.இது, துருக்கிக்கு மட்டுமின்றி ஈராக்கில் தன்னாட்சி அமைப்புடன் செயல்படும் குர்திஷ் பிராந்திய அரசுக்கும் தலைவலியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று துருக்கி ராணுவத்தினரும், விமானப் படையினரும் ஈராக் எல்லைக்குள் புகுந்து பி.கே.கே., கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் துணையுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.இது பற்றி துருக்கி ராணுவ அமைச்சர் ஹூலுசி அகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
துருக்கி படையினரின் குண்டு வீச்சில் பி.கே.கே., தலைமை அலுவலகம், பதுங்கு குழிகள், குகைகள், வெடிமருந்து கிடங்குகள் ஆகியவை அழிக்கப்பட்டன. இத்தாக்குதலில், பி.கே.கே., அமைப்பைச் சேர்ந்த, 20 பேர் கொல்லப்பட்டனர்.துருக்கி ராணுவ வீரர்கள் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement