கொழும்பு: இலங்கையில், செய்த சில தவறுகள் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்பு கொண்டுள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பல நெருக்கடிகளுக்கு ஆளாகிஉள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளதால், அதிபரும், பிரதமரும் பதவி விலகக் கோரி, அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, 3ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர்த்து, 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே, ஏற்கனவே நியமித்த நான்கு அமைச்சர்களுடன், புதிதாக 17 பேரை அமைச்சர்களாக நியமித்துள்ளார். அவர்கள் நேற்று பதவியேற்றனர்.
அவர்கள் மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கோவிட் சூழல், கடன் சுமையை எதிர்கொண்டதுடன், நாம் சில தவறுகளை செய்தோம். அதனை நாம் திருத்த வேண்டும். தவறுகளை சரி செய்து முன்னேறி செல்ல வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.
கடன் சுமையை சமாளிப்பதற்காக முன்னரே, சர்வதேச நிதியத்தை நாடியிருக்க வேண்டும். இலங்கையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன உரங்களை முற்றிலும் தடை விதித்திருக்கக்கூடாது. இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட மக்கள் காட்டும் கோபம் நியாயமானது. இவ்வாறு கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
Advertisement