370 தொகுதிகளில் போட்டி + வலுவான கூட்டணி.. இதுதான் பி.கே. பிளான்.. ராகுலுக்கு ஓ.கே!

காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தியை 2வது முறையாக சந்தித்துப் பேசியுள்ளார்
பிரஷாந்த் கிஷோர்
. இதனால் அவர் காங்கிரஸில் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சொல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் வட்டாரம் பெருத்த எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது. காரணம், பி.கே. எனப்படும் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அகில இந்திய அரசியலில் பல மாற்றங்களுக்கும், புதிய புரட்சிகளுக்கும் வித்திட்டவர் பி.கே. என்றால் அது உண்மைதான். மேற்கு வங்காளத்தில் மமதாவை மீண்டும் அரியனை ஏற்ற பேருதவி புரிந்தார். தமிழ்நாட்டில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு ஆலோசனை கூறியவர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை அரியனை ஏற்றியவர். ஏன் 2014ம் ஆண்டு பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி வரக் காரணமே பி.கே. வகுத்துக் கொடுத்த உத்திகள்தான்.

இப்படிப்பட்ட பி.கே. தற்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளார். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைமையுடன் தொடர்ந்து பேசி வருகிறார் பி.கே. ஏற்கனவே சோனியா காந்தியை சந்தித்த நிலையில் நேற்று மாலை மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது குஜராத், இமாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும், கர்நாடகா, சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.

பிரஷாந்த் கிஷோரை, காங்கிரஸ் கட்சியில் வந்து இணையுமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ராகுல் காந்திக்கும் இது ஓகேதானாம். பி.கே.வும் கூட இணையக்கூடும் என்றே சொல்கிறார்கள். கட்சியை 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தயார் செய்வது எப்படி, வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்த திட்டமிடலை பி.கே.விடம் கேட்டுள்ளார் சோனியா காந்தி. அடுத்த பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் திட்டத்தையும் சோனியா காந்தி பி.கே.விடம் கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

தனது முதல் சந்திப்பின்போது 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலை எப்படி சந்திக்கலாம் என்பது குறித்து சோனியா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் விவரித்துள்ளார் பி.கே. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிகேவின் திட்டம் பலருக்கும் பிடித்து விட்டதாம். அதற்கு முன்னோட்டமாக எதிர் வரும் பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை வெல்ல வைக்கும் திட்டமும் பி.கே.விடம் உள்ளதாம்.

ஜி.கே.வாசன் ஏன் பாஜகவில் இன்னும் சேரலை.. என்னாச்சு??

பி.கே.வின் லோக்சபா தேர்தல் திட்டம் என்னவென்றால் – காங்கிரஸ் கட்சி 370 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.. பிற இடங்களில் வலுவான பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இப்படி செய்தால் காங்கிரஸ் நிச்சயம் வெல்ல முடியும் என்று திட்டமிட்டுள்ளாராம்.

பி.கேவைப் பொறுத்தவரை, உ.பி, பீகார், ஒடிஷாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். இதை ராகுல் காந்தியும் கூட ஏற்றுக் கொண்டுள்ளாராம். அடுத்தடுத்த சந்திப்புகளில் பி.கே. காங்கிரஸில் இணைவாரா அல்லது வெளியில் இருந்து காங்கிரஸை வளர்த்து விடும் வேலையை மட்டும் செய்வாரா என்பது தெரிய வரலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.