இரவு-பகலாக ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ லேப்-டாப் வெடித்து பெண் ஐடி ஊழியர் படுகாயம்

திருமலை: ஒர்க்-ஃப்ரம் ஹோமில் இரவு பகலாக பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐடி ஊழியர் லேப்-டாப் வெடித்ததில் படுகாயமடைந்தார். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ கொடுத்துள்ளது. இதனால் பல ஊழியர்கள் காலை முதல் நள்ளிரவு வரை லேப்டாப்பில் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருகின்றனர். பெரும்பாலானோர் லேப்டாப்பை, சார்ஜர் பிளக்குடன் இணைத்து தொடர்ச்சியாக வேலை செய்து வருவதால் ஹை-வோல்டேஜ் பிரச்னை ஏற்பட்டு சில இடங்களில் விபத்து சம்பவங்களும் நடக்கிறது. இதேபோன்ற சம்பவம் ஆந்திராவில் நேற்று நடந்துள்ளது. அதுபற்றிய விவரம்: கடப்பா மாவட்டம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா (24), இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி புரிகிறார். கொரோனா பிரச்னை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி இரவு பகலாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை லேப்டாப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென லேப்டாப்பில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது. இதில் சுமலதா மீது மின்சாரம் பாய்ந்தது. இவரது அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மின் இணைப்பை துண்டித்து சுமலதாவை மீட்டனர். பலத்த தீக்காயமடைந்து மயங்கிய அவரை கடப்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமலதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.