உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதையடுத்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாசலப்பிரதேச மாநிலத்திலும், அதையடுத்து மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 2024-ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது.
காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுக்க பிரபல தேர்தல் வியூக நிபுணர் (ஐ பேக்) பிரசாந்த் கிஷோர் முன்வந்துள்ளார். கடந்த 16-ந்தேதி சோனியாகாந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 4 மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பிரசாந்த்கிஷோர் பாராளுமன்றம் மற்றும் வர இருக்கிற சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம் மற்றும் கூட்டணி குறித்தும் பல யோசனைகள் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் விரிவாக அளித்தார். இதையடுத்து இது தொடர்பாக தனி குழு அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று சோனியா காந்தியை பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பிரியங்காகாந்தி, முகுல் வாஸ்னிக், ரண்தீப் சுர்ஜிலால் அம்பிகாசோனி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்தும் 5 மணி நேரம் நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. அப்போது பிரசாந்த் கிஷோர் தேர்தல் வெற்றிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக பிரசாந்த் கிஷோருடன் இன்று சோனியா காந்தி 3-வது நாளாகஆலோசனை நடத்தி வருகிறார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல் நாத், அம்பிகா சோனி, வேணு கோபால், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் காங்கிரசை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சோனியாவுடனான அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் 3-வது முறையாக பிரசாந்த் கிஷோர் சோனியாவை சந்தித்து பேசி உள்ளார். இதனால் வரும் நாட்களில் காங்கிரசில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபாமுப்தி நேற்று இரவு சோனியாகாந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதையும் படியுங்கள்.. பாரம்பரிய மருத்துவத்திற்கு முதலீடுகள் தேவை- ஆயுஷ் மந்திரி