கள்ளக்குறிச்சி: இரு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் திருநங்கைகள் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
மகாபாரதப் போரில் அரவான்(கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப் படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகளுக்கான மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த திருவிழா கடந்த இரு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வந்தனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண முடித்தல் நடைபெற்றது.
அப்போது மணப்பெண் அலங்காரத்தில் வந்த திருநங்கைகளுக்கு கூத்தாண்டவர் கோயில் பூசாரிகள் தாலி கட்டி அனுப்பி வைத்தனர். பின்னர் விடிய விடிய கோயில் வளாகத்தில் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.
இதையடுத்து நாளை அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அரவான் தேரில் அழைத்துச் செல்லப்பட்டு பலியிடப்படுவார். இதைக் கண்டு திருநங்கைகள் அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தி, தாலிகளை அறுத்து சோகத்துடன் ஊர் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.