பாதத்தை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து தண்டனை – பட்டியலின மாணவனுக்கு நேர்ந்த கொடுமை

உத்தரபிரதேசத்தில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவன் ஒருவனை, தனது கால் பாதத்தை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து இளைஞர் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலி பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவன், அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் அவர் வசித்து வந்தார். இவரது தாயார் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதியன்று வயலில் வேலை பார்க்கும் தனது தாயாருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக மாணவன் சென்றுள்ளார்.
image
அப்போது அங்கு நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், அந்த மாணவனை அழைத்துள்ளனர். பின்னர், அவரிடம் தாங்கள் சார்ந்த ஜாதியின் பெயரை ஹிந்தியில் எழுதுமாறு கூறியுள்ளனர். அந்தப் பெயரை மாணவன் பிழையாக எழுதியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்களில் ஒருவர், தனது கால் பாதத்தை நாக்கால் சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி, அந்த மாணவனும் இளைஞரின் பாதத்தை நாக்கால் சுத்தம் செய்துள்ளார். இதனை அங்கிருந்த மற்ற இளைஞர்கள் வீடியோ எடுத்தனர்.
image
இளைஞரின் செயலால் மனம் நொந்த அந்த மாணவன், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும், முதலில் இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி பலரின் கண்டனத்துக்கு உள்ளானதை அடுத்து, சம்பந்தப்பட்ட 7 இளைஞர்களை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.