குடும்பச் செலவிற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் பள்ளிக்கூட தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் லதா (38). இவரது மகன் தவஜ் (14). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு லதா, தனது கணவர் பரத்வாஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில் இன்று காலை மயங்கிய நிலையில் தவஜ் எதிர்வீட்டில் வசிக்கும் நவநீதம் என்பவரை அழைத்துள்ளார். இதனை அடுத்து அவரும் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு லதா படுக்கை அறையில் இறந்து கிடந்தார். இதனை அடுத்து அவர் உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த உறவினர் ராஜேந்திரன் என்பவர் மயங்கிய நிலையில் இருந்த தவஜை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளர். ஆனால், சிகிச்சை பலனின்றி தவஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லதா குடும்பம் செலவிற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக லதா, தனது மகனுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் உடற்கூராய்வு அறிக்கைக்கு பிறகு, இருவர்களது இறப்பு குறித்து முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். அம்பத்தூரில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM