ஆளுநரின் காரை நோக்கி கருப்புக்கொடியுடன் பாய்ந்த தொண்டர்கள் – மயிலாடுதுறையில் பரபரப்பு…

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் பங்குபெற சென்ற ஆளுநருக்கு எதிராக, திக, விசிக உள்பட பல அமைப்புகள் கருப்புகொடி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், ஆளுநரின் வாகனத்தை மறிக்க கருப்புக்கொடியுடன் தொண்டர்கள் ஓடியதும், கருப்புகொடி கட்டிய கம்புகளை அவரது வாகனத்தின்மீது வீசியதும்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான உறுதியான தகவல்கள் தெரியவில்லை.

ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகஅரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நீட் மசோதா உள்பட பல விஷயங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆளுநர் நிகழ்ச்சிகளை தமிழகஅரசு தவிர்த்து வருகிறது.  ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கின்றனர். திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியிலும், ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று முதன்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மயிலாடுதுறையில் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.  தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தின. . தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வருவதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு, தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால், இன்று திட்டமிட்டபடி ஆளுநர் இன்று காலை தருமபுரம் ஆதீனத்திற்கு வந்திருந்து யாத்திரை துவக்கம், புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரி எதிரில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக 200க்கும் மேற்பட்ட போலீஸார் மயிலாடுதுறை தருமபுரம் திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு செல்வதற்கு முன்பாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்று ஆளுநர் அங்கு வழிபாடு செய்தார். வழிபாட்டிற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பிய ஆளுநர் ரவி, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வழியாக கடந்து சென்றார்.

அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவர்களை மறைக்கும் வகையில் காவல்துறையினரின் வாகனங்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு எதிரே நிறுத்தி அவர்களை ஆளுநர் பார்க்காத வண்ணம் ஏற்பாடு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ஆளுநரின் காரை நோக்கி தங்கள் கைகளில் வைத்திருந்த கருப்புக்கொடி கட்டிய கம்புகளை வீசி எறிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநரின் கார்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.  ஆனால், போராட்டக்காரர்கள் கம்புகளை வீசுவதற்குள்  ஆளுநரின் கார் அந்த இடத்தை விட்டு கடந்து விட்டது என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் கார்மீது கம்புகளை வீசிய சுமார் 150 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.   தமிழக அரசுடன் ஆளுநருக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டு, அதன் விளைவாக மோதல் போக்கு நிலவும் நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்கியிருப்பது இனிவரும் காலங்களில் அவருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுப்பெறும் என்பதற்கான முன்னோட்டமாகவே இந்த போராட்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கட்சி சிந்தாந்தங்களுக்காக ஆளுநரை கண்மூடித்தனமாக முதல்வர் வெறுக்கிறார் என்றால், இது அவர் பதவி விலகுவதற்கான நேரம். திமுகவை சார்ந்தவர்கள் என கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எரிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார்கள். தமிழக முதல்வரால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை. எனவே முதல்வர் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுநருக்கு பாதுகாப்பு நடவடிக்கை ஏன் சரியாக எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் ? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தமிழகத்திலேயே, ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அதிமுக ஒருபோதும் ஏற்காது என்பதோடு, இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

ஆளுநர் கார்மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.