மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் 8 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அதிகாலை 1.50 மணிக்கு இந்தியா வந்து இறங்கிய அவர் பாதுகாப்பு அணிவகுப்புடன் மும்பை மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அவர் செல்லும் பாதையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் காரில் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய பந்த்ரா போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மொரீசியஸ் பிரதமரின் அணிவகுப்பு வந்துக்கொண்டிருந்த சாலையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் திடீரென அப்பகுதியில் வந்த பிரவுன் நிற ரெனால்ட் கார் ஒன்று ஹாரன் அடித்தப்படியே அணிவகுப்பை நோக்கி சென்றது. போலீசார் காரை நிறுத்தும்படி கையசைத்தும் நிற்கவில்லை. இந்நிலையில் அவர்களை விரட்டி சென்று தடுத்து நிறுத்தினோம். விசாரித்ததில் அதில் அகாஷ் அனில் சுக்லா என்பவர் காரை ஓட்டி வந்தார். அவர் குடித்திருந்ததாக கருதப்படுகிறது. ஆனால் மருத்துவ அறிக்கை வந்தவுடன் தான் இது உறுதி செய்யப்படும். அவரையும், அவரது நண்பரையும் கைது செய்து பின்பு ஜாமினில் விடுவித்துள்ளோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.