கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்த காதல் தம்பதியர் தங்கள் மீது வைக்கப்பட்ட ‘லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டை சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷெஜின். இஸ்லாமியரான இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பில் நிர்வாகியாக இருக்கிறார். இதனிடையே, ஷெஜினுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோய்ஸ்னா மேரி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் இருவரும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், வெவ்வேறு மதம் என்பதால் அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, அவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.
இந்த திருமணத்தை ஏற்காத ஜோய்ஸ்னா மேரியின் தந்தை, ஷெஜின் மீது ‘லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டை சுமத்தினார். தனது மகளை இஸ்லாமியராக மாற்றும் நோக்கிலேயே, ஷெஜின் கட்டாயப்படுத்தி அவரை திருமணம் செய்திருப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார். ‘லவ் ஜிகாத்’ புகாரால் இந்த விவகாரம் கேரளாவில் அரசியல் ரீதியான பரபரப்பான வழக்காக மாறியது.
எனினும், இந்த விவகாரத்தில் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாததால் கேரள உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஜோய்ஸ்னா மேரியின் தந்தை வழக்கு தொடர்ந்தார். அதில், தனது மகளை ஷெஜின் கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்றம், ஷெஜினையும், ஜோய்ஸ்னா மேரியையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
அதன்படி, தம்பதியர் இருவரும் இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது ஜோய்ஸ்னா மேரி கூறுகையில், “எனக்கு 18 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. நான் விருப்பப்பட்டுதான் ஷெஜினை திருமணம் செய்து கொண்டேன். யாரும் என்னை வற்புறுத்தவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் காதலித்து இப்போது ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்” என்றார். இதையடுத்து, அவர்களின் திருமணத்தை அங்கீகரித்த நீதிபதி, ஜோய்ஸ்னா மேரியின் தந்தை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து நீதிமன்றத்துக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் ஷெஜின் கூறுகையில், “நான் ஒரு மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் நான் மதவாதி கிடையாது. ஜோய்ஸ்னா மேரி அவரது வாழ்க்கை முழுவதும் கிறிஸ்தவராகவே இருக்கட்டும். அது அவரது தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிட மாட்டேன். அதேபோல, அவரும் என் மத விஷயத்தில் தலையிட மாட்டார். நாங்கள் மனதை பார்த்து தான் காதலித்தோம். மதத்தை பார்க்கவில்லை” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM