கொழும்பு:
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை நிதித்துறை மந்திரி அலி சப்ரி தலைமையிலான அதிகாரிகள் வாஷிங்டன் சென்றுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நேற்று ஆரம்பமாகியது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர நிதியுதவி அளித்து உதவ வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பிரதிநிதித்துவத்திற்குப் பிறகே, இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையின் நிதி நிலைமையைத் சீராக்க, அந்நாட்டு அரசு ஏற்கெனவே எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியது எனவும் இலங்கையின் சார்பில் வைக்கப்பட்ட சிறப்பு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய நாணய நிதியம் உறுதியளித்திருப்பதாகவும் இலங்கை நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…சீனா ஷாங்காயில் அதிகரிக்கும் கொரோனா- இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு