அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகின் பாரம்பரிய மருத்துவ சகாப்தத்தின் தொடக்கம்: பிரதமர் மோடி| Dinamalar

ஜாம்நகர்: உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ‘அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகின் பாரம்பரிய மருத்துவ சகாப்தத்தின் தொடக்கம் இது’ என தெரிவித்தார்.

அடிக்கல்:

மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அவர்களுக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி நம் அனைவரின் இதயங்களையும் தொட்டார்.

இந்தியா மீது பாசம்:

டெட்ரோஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், தனது இந்திய ஆசிரியர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டதை பெருமையுடன் குறிப்பிடுவார். இந்தியா மீதான அவரது பாசம் தான் தற்போது ஒரு கல்வி நிறுவனம் தொடங்க செய்திருக்கிறது. அவரது எதிர்பார்ப்பு, நம்பிக்கைகளுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று அவருக்கு உறுதி அளிக்கிறேன்.

30 ஆண்டு கால உறவு:

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துடன் எனக்கு 30 ஆண்டு கால உறவு உள்ளது. எனது அழைப்பை ஏற்று, குஜராத் வந்திருக்கும் அவருக்கு எனது நன்றிகள். குஜராத்தி மொழியில் பேசி அவர் எங்களின் இதயங்களை வென்றதில் எனக்கு மகிழ்ச்சி.

யோசனை

பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாள பிரதமர்களிடம் கலந்தாலோசித்தேன். உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு அவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இதன் மூலம் இந்தியாவுடன் ஒரு புதிய கூட்டாண்மையை உலக சுகாதார அமைப்பு ஏற்படுத்தி உள்ளது.

latest tamil news

மனிதகுலத்துக்கு சேவை:

இந்த மருத்துவ மையத்தின் மூலம், மனிதகுலம் அனைவருக்கும் சேவை செய்வதற்கான ஒரு பெரிய பொறுப்பை இந்தியா எடுத்துக்கொள்கிறது. பாரம்பரிய மருந்துகள் மூலம் சிறந்த மருத்துவ தீர்வுகளை உலகிற்கு வழங்க இந்த மையம் உதவும். இது ஒரு நிறுவனத்தின் துவக்க விழா மட்டுமல்ல. அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகின் பாரம்பரிய மருத்துவ சகாப்தத்தின் தொடக்கம்.

நீரிழிவு, உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு, இந்தியாவின் மரபு வழி மருத்துவம் உலகிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மன அழுத்தத்தைக் குறைக்கவும், சமநிலையை பராமரிக்கவும் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு யோகா உதவுகிறது. யோகாவின் நோக்கத்தை விரிவுபடுத்த, இந்த புதிய மையம் முக்கிய பங்கு வகிக்கும்.

5 இலக்குகள்:

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாரம்பரிய மருந்துகளை தொகுப்பது உள்ளிட்ட 5 இலக்குகளை வைத்துள்ளேன். பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருந்துகளின் அறிவு, அடுத்த தலைமுறைக்கு உதவும் என்பதால் இது முக்கியமானது. ஆண்டு தோறும் பாரம்பரிய மருத்துவ திருவிழாவை இந்த மையத்தில் நடத்த வேண்டும். இதில் உலகம் முழுவதிலும் உள்ள நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நோய்களுக்கு, முழுமையான சிகிச்சை முறைகள் இங்கு அளிக்கப்படும். இதில் நோயாளிகள், நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் முழு பலனையும் இங்கு பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.