பெங்களூரு : பெங்களூரில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் 169 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க, போலீஸ் துறை, மாநகராட்சி முடிவு செய்துள்ளன.
பெங்களூரில் நான்கைந்து நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் நீர் தேங்குகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இது போன்று மழை பாதிப்புள்ள, குடியிருப்புகள், ஜங்ஷன், சுரங்கப்பாதை உட்பட, 169 பகுதிகளை பெங்களூரு போக்குவரத்து போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இத்தகைய இடங்களை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து கண்காணிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தடுப்பது இவர்களின் நோக்கமாகும்.பெங்களூரு மழைநீர் கால்வாய் பிரிவு தலைமை பொறியாளர் சுகுணா கூறியதாவது:ஏழு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் 550 வெள்ள அபாயம் உள்ள பகுதிகள், அடையாளம் காணப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன.மழைநீர் கால்வாய்களின் உயரத்தை அதிகரிப்பது என பல மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுத்ததால், 2019ல் வெள்ள அபாயமுள்ள பகுதிகள் எண்ணிக்கை 202 ஆக குறைக்கப்பட்டது.தற்போது இப்பகுதிகளில், அபிவிருத்தி பணிகள் நடக்கின்றன. சில இடங்களில் பணிகள் முடிந்தன. சில இடங்களில் முடியும் கட்டத்தில் உள்ளன. அதன்பின் வெள்ள பாதிப்பு வெகுவாக குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement