பெங்களூரு : கர்நாடகாவில் ஐந்து ஆண்டில் 5,144 கட்டட தீ விபத்துகள் நடந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மாநிலத்தில் நடக்கும் தீ விபத்துகள் குறித்து கர்நாடக மாநில தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:கர்நாடகத்தில் 2017 ஜனவரி 1 முதல் இந்த ஆண்டு மார்ச் 10 வரை ஐந்து ஆண்டுகளில் 5,144 கட்டட தீ விபத்துகள் பதிவாகி உள்ளன. இதில் 55 சதவீதம் பெங்களூரில் நடந்தவை.இதன் மூலம் 2,847 கட்டட தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான விபத்துகள் மின்கசிவால் தான் நடந்துள்ளன.அதிகபட்சமாக பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் 858; மேற்கு மண்டலத்தில் 720; வடக்கு மண்டலத்தில் 503; தெற்கு மண்டலத்தில் 766 தீ விபத்துகள் பதிவாகி உள்ளன.
பெங்களூரில் நடந்த கட்டட தீ விபத்துகளில் 1,889 மின் கசிவு; 785 கேஸ் கசிவு; 41 ரசாயனம்; 50 எண்ணெய் கசிவு; 82 சிகரெட் மூலமாகவும் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரில் தினமும் ஏதாவது ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. ஒரு நாளைக்கு ஏழு முதல் 10 கட்டட தீ விபத்துகளை சந்தித்த சம்பவமும் நடந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட பெங்களூரில் தான் அதிக தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இத்துறையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.எங்களுடன் ஊர்க்காவல் படை வீரர்களையும் இணைத்து கொண்டுள்ளோம். அவர்கள், மாவட்டங்களில் தீயணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement