மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை – 22 ஆண்டுகளாக பாசத்துடன் பராமரிக்கும் தாய்

இன்றைய நடைமுறை வாழ்வில், பத்துமாதம் பெற்றெடுத்த தாயையும், பாசமாக வளர்த்த தந்தையும் பராமரிக்க மனமின்றி தனியே தவிக்கவிட்டுச் செல்லும் பிள்ளைகளின் செயல் மரித்துப்போன மனிதநேயத்தின் உச்சம். அதேவேளையில் பெற்ற தாயின் மனது எப்போதுமே பித்துதான் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் 22 ஆண்டுகளாக மூளைவளர்ச்சி குன்றிய தனது பெண் குழந்தையை தனி ஒரு ஆளாக பாசமாக பராமரித்து வளர்த்து வருகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த மனிதநேயமிக்க தாயொருவர்.
புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள பிச்சத்தாம்பட்டி கலைவாணர் தெருவைச் சேர்ந்த சிவமணி-சுமதி தம்பதிக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியிருக்கிறது. வறுமை நிலையிலும் கூட மகிழ்வோடு வாழ்வைத் தொடங்கிய அவர்களுக்கு லட்சுமி என்ற குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை என்பது ஓராண்டுக்குள் தெரியவந்திருக்கிறது. இருந்தபோதிலும் எப்படியும் அந்த குழந்தையை குணமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் மருத்துவமனை, கோயில் என பல்வேறு இடங்களுக்கும் குழந்தையை தூக்கிச் சென்றிருக்கின்றனர்.
image
அதன்பின் கால ஓட்டத்தில் அடுத்தடுத்து அந்த தம்பதியருக்கு நந்தினி, பவித்ரா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க கூலி வேலைபார்த்து சிவமணி கொண்டுவரும் சொற்ப கூலியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட லட்சுமி உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவர் சிவமணி உடல்நலக்குறைவால் மரித்துபோக அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்துப் போனார் சுமதி. எப்படியோ தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது மகள்களை சொந்தத்தில் திருமணம் செய்து வைத்துவிட்டார்.
image
ஆனால் மூளைவளர்ச்சி குன்றிய லட்சுமிக்கு தற்போது 22 வயதாகும் நிலையில் தனி ஒரு ஆளாக சிறு குழந்தையை பராமரிப்பது போல் பாவித்து பராமரித்து வருகிறார் சுமதி. தனது உடல் சார்ந்த பிரச்னைகளைக்கூட வாய்விட்டு சொல்லமுடியாத அளவுக்கு உடல்நல பாதிப்புக்கு லட்சுமி ஆளாகியுள்ள நிலையில், அவரின் அனைத்து தேவைகளையும் சுமையாக கருதாமல், அன்போடு செய்துவருகிறார் சுமதி. லட்சுமிக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 2000 ரூபாய் உதவி தொகையை கொண்டும், அருகே உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் வேலைகள் செய்து அதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் லட்சுமியை பராமரிப்பதோடு இருவருக்குமான உணவு தேவையைப் பூர்த்தி செய்து வந்திருக்கின்றனர்.
image
ஆனால் அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையும் சில மாதங்கள் வருவதில்லை என்றும், ஏற்கெனவே பல மாதங்கள் வராததால் தங்கள் வயிற்றுப் பசியைப் போக்குவதே பெரும்பாடாக உள்ளானதாகவும், இருக்கும் குடிசை வீடும் மழைகாலத்தில் ஒழுகுவதால் ஆங்காங்கே சாக்குப் பைகளைப் போட்டு மூடி வைத்துள்ளதாகவும் கூறுகிறார் சுமதி. எனவே அரசு சார்பில் தனது மகளுக்கு வரும் உதவித்தொகையை தடையின்றி மாதந்தோறும் வழங்க வேண்டும் என்றும், தான் வீட்டிலே இருந்து பிள்ளையை பராமரித்துக் கொள்வதுபோல் ஏதாவது தொழில் செய்ய மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்தால் லட்சுமியை பராமரிக்க ஏதுவாக இருக்கும் என்றூம், அதுமட்டுமின்றி வசிப்பதற்கு ஒரு வீடு அரசு கட்டிக்கொடுத்தால் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் சுமதி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.