திருமலை: பதவி பறிபோன நிலையில் ஆந்திர முன்னாள் பெண் துணை முதல்வர், தனது வீட்டு தோட்டத்தில் இயற்கை முறையில் காய்களை விளைவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஒப்பந்த அடிப்படையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சராக இருந்தவர்களிடம் ராஜினாமா பெறப்பட்டது. இதையடுத்து 11 பேரை தவிர 14 எம்எல்ஏக்களுக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவ்வாறு துணை முதல்வராக பணியாற்றிய பாமுலா புஷ்பஸ்ரீ வாணியும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவர். விஜயநகரம் மாவட்டம் குருபம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து 2முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் புஷ்பஸ்ரீவாணி. 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு புஷ்பவாணிக்கு ஜெகன்மோகன் தனது அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி வழங்கினார். வலுவான தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து தொடர் வெற்றிகளைப் பெற்றதால் இந்த பதவி வழங்கப்பட்டது. 5 துணை முதல்வர்களில் ஒருவராகவும், மலைவாழ் மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவர் ஏற்கனவே விவசாயத்தில் கவனம் செலுத்தியுள்ளார். தற்போது பதவி பறிபோன நிலையில் இயற்கை விவசாயத்தில் தீவிரம் செலுத்தி வருகிறார். அதன்படி தனது வீட்டில் காலியாக உள்ள இடத்தில் தக்காளி, பச்சை மிளகாய், கேரட், முள்ளங்கி, சுரைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளார். இவை தற்போது அறுவடை செய்து வருகிறார். இதுகுறித்து புஷ்பஸ்ரீவாணி தனது சமூக வலைதளத்தில் படங்களுடன் வெளியிட்டுள்ள தகவலில், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.