மும்பை:
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக் அவுட்டானார். மேக்ஸ்வெல் 23 ரன்னிலும், பிரபு தேசாய் 10 ரன்னிலும் வெளியேறினர்.
கேப்டன் டூ பிளசிஸ் தனி ஆளாக போராடினார். முதலில் நிதானமாக ஆடிய அவர் பின்னர் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஷாபாஸ் அகமது ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 26 ரன்னில் அவுட்டானார். 4 ரன்னில் சதத்தை தவறவிட்ட டூ பிளசிஸ் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.