Nelson Dilipkumar directs Rajinikanth next movie Thalaivar 169: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை.
இந்தநிலையில், ரஜினி அடுத்த படம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தன. இதில் முக்கியமான ஒன்று ரஜினியின் அடுத்தப்படத்தை பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்பது.
நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள, இப்படம் கடந்த 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றியால் வசூலிலும் தொய்வைச் சந்தித்து வருகிறது.
இதையும் படியுங்கள்: பீஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்; 5 நாட்களில் ரூ.200 கோடியைத் தாண்டியது
முன்னதாக பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிகாந்த் தலைவர் 169 படத்தின் இயக்குநரை மாற்றி உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த செய்திகள் கடந்த ஒரு வார காலமாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.
இந்நிலையில் ‘தலைவர் 169’ படத்தை நெல்சன்தான் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை மாத தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் சினமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுய விவரத்தில் தலைவர் 169 படத்தை மீண்டும் இணைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.